செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை - அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Published On 2018-07-31 11:02 IST   |   Update On 2018-07-31 11:02:00 IST
நெல்லை மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் மலைப்பகுதிகளில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. #PapanasamDam
நெல்லை:

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கி 3 மாதங்கள் மழை பெய்யும். குறிப்பாக மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் கன மழை பெய்யும். கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை சரியாக பெய்யாததால் விவசாயிகள் கவலையில் இருந்தனர். இந்த ஆண்டு வழக்கம்போல தொடங்கிய பருவ மழை தொடர்ந்து ஒரு மாதத்துக்கும் மேலாக பெய்தது.

நெல்லை மாவட்டத்தில் பெய்த மழையினால் அணைகள், குளங்கள் நிரம்பின. மாவட்டத்தில் உள்ள கடனா, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, கொடுமுடியாறு, அடவிநயினார் அணை ஆகிய 6 அணைகள் நிரம்பின. பிரதான பாசன அணையான பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதனால் அணைகளில் இருந்து கார் சாகுபடிக்காக தண்ணீர் திற‌ந்துவிடப்பட்டுள்ள‌ன.

இந்த நிலையில் கடந்த‌ 10 நாட்களாக மழை குறைந்தது. எனினும் அணைகளுக்கு மிதமான அளவு நீர் வரத்து இருந்தது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு முதல் மலைப்பகுதிகளில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும், மலையை ஒட்டியுள்ள நகர பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

அணைப்பகுதியில் அதிகபட்சமாக குண்டாறு அணையில் 49 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. இன்று காலை நிலவரப்படி பாபநாசம் அணை நீர்மட்டம் 113 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1513 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 1405 கன அடி தண்னீர் வெளியேற்றப்படுகிறது.

இதேபோல சேர்வலாறு அணை நீர்மட்டம் 121 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 74.80 அடியாகவும் உள்ளன. அணைப்பகுதி மற்றும் தாலுகா பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் மில்லிமீட்டரில் வருமாறு:

குண்டாறு-49, செங்கோட்டை-28, அடவி நயினார் அணை-20, தென்காசி-19, பாபநாசம்-15, சேர்வலாறு-10, ராதாபுரம்-8, கொடுமுடியாறு-7, அம்பை-4, மணிமுத்தாறு-3, ஆய்க்குடி-2.8, சேரன் மகாதேவி-2.4, பாளை- 2.2, நாங்குநேரி-2, நெல்லை-1. #PapanasamDam

Tags:    

Similar News