செய்திகள்

கீழணையில் இருந்து 1,600 கனஅடி தண்ணீர் திறப்பு - வீராணம் ஏரியின் நீர்மட்டம் உயருகிறது

Published On 2018-07-30 05:30 GMT   |   Update On 2018-07-30 05:30 GMT
கீழணையில் இருந்து 1,600 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. #Kallanai #VeeranamLake #Cauvery
சிதம்பரம்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. விவசாயிகளின் உயிர்நாடியாக விளங்கும் இந்த ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும். இந்த ஏரி மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 72 கன அடி தண்ணீர் அனுப்பப்படும்.

நீர் வரத்து இல்லாததால் கடந்த 5 மாதங்களாக வீராணம் ஏரி வறண்டு காணப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடகாவில் பெய்த கன மழை காரணமாக காவிரி உபரிநீர் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டது. அந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்தடைந்தது.

அங்கிருந்து கல்லணைக்கு வந்த தண்ணீர் பின்னர் கீழணைக்கு வந்தது. கீழணையில் இருந்து கடந்த 27-ந் தேதி வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று முன்தினம் 1,200 கன அடியாக இருந்தது. நேற்று இரவு வரை 1,600 கன அடியாக உயர்த்தப்பட்டது. கடந்த 3 நாட்களாக வீராணம் ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

நேற்று முன்தினம் ஏரியின் நீர்மட்டம் 37 அடியாக இருந்தது. அது இன்று 39 அடியாக உயர்ந்துள்ளது. படிப்படியாக நீர்மட்டம் உயர்ந்து வருவதால் வீராணம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. 45 அடி வரைக்கும் தண்ணீர் தேக்கி வைக்கப்படும். அதன்பிறகு சென்னைக்கு குடிநீர் அனுப்புவது குறித்து முடிவு செய்யப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #Kallanai  #VeeranamLake #Cauvery


Tags:    

Similar News