செய்திகள்

மதுரையில் மணல் கடத்தல் கும்பலிடம் லஞ்சம் கேட்ட சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்

Published On 2018-07-20 07:33 GMT   |   Update On 2018-07-20 07:33 GMT
மதுரையில் மணல் கடத்த லஞ்சம் வாங்கிய புகாரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.

மதுரை:

மதுரையில் வைகை ஆற்றுப்படுகையில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் கடத்தல் காரர்கள் மணல் திருடுவது வாடிக்கையாக நடந்து வருகிறது.

மதுரை வைகை ஆற்றுப் பகுதியில் மணல் அள்ளுவதை தடுக்க அண்ணா நகர், மதிச்சயம், தெப்பக்குளம் ஆகிய 3 போலீஸ் நிலைய எல்லைகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகிறார்கள்.

மதிச்சியம் சப்-இன்ஸ்பெக்டர் பிரேம் சந்திரன் சீருடையுடன் வைகையாற்றுக்குள் சென்று மணல் திருடும் கும்பலிடம் பணம் கேட்பதாக வீடியோ வெளியானது சமூகவலை தளத்திலும் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த வீடியோவில் சீருடை அணியாமல் லுங்கியுடன் அண்ணாநகர் போலீஸ்காரர் ஒருவர், ‘எல்லை தாண்டி வந்து மாமூல் கேட்பது ஏன்?

சப்-இன்ஸ்பெக்டர் ரூ.5 ஆயிரம் மாமூல் வாங்கிய காட்சியை பதிவு செய்து உள்ளேன். கிராம நிர்வாக அதிகாரிக்கும் மாமூல் பணம் செல்கிறது’ என்று கூறி தகராறில் ஈடுபடுகிறார்.

இதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டரும், போலீஸ்காரரும் தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டு சண்டைபோடுகின்றனர்.

இதையடுத்து அங்குள்ளவர்கள் இருவரையும் விலக்கி விடுகின்றனர்.

அப்போது மணல் கடத்தல்காரர்கள், ‘அடிக்கடி இங்கு வரவேண்டாம். மாதம் ஒரு தொகையை மாமூலாக தந்துவிடுகிறோம்’ என்று பிரேம் சந்திரனிடம் சமரசம் பேசுவதோடு வீடியோ காட்சி முடிவடைகிறது.

மணல் திருட்டை தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீசாரே மாமூல் வாங்கிக்கொண்டு மணல் திருட்டை அனுமதிப் பதும், மாமூல் வாங்கு வது தொடர்பாக தகாத வார்த்தைகளால் திட்டுவதும் மதுரை நகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் பிரேம் சந்திரனை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து மதுரை மாநகர போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags:    

Similar News