செய்திகள்

திருவண்ணாமலையில் கற்பழிக்கப்பட்ட ரஷிய இளம்பெண் வாக்குமூலம்: 15 பேர் கும்பலிடம் தீவிர விசாரணை

Published On 2018-07-19 10:44 GMT   |   Update On 2018-07-19 10:44 GMT
திருவண்ணாமலையில் கற்பழிக்கப்பட்ட ரஷிய இளம்பெண் வாக்குமூலம் அளித்துள்ளார். #Russiantouristgirl

திருவண்ணாமலை:

திருவண்ணாமலைக்கு கடந்த 12-ந் தேதி சுற்றுலா வந்த ரஷிய நாட்டை சேர்ந்த இளம்பெண் அலினா (வயது 22), செங்கம் சாலை கஸ்தூரிநகரில் உள்ள அபார்ட்மெண்ட்டில் அறை எடுத்து தங்கினார்.

கோவில், ஆசிரமங்களை சுற்றி பார்த்து லாட்ஜில் தங்கி இருந்த ரஷிய இளம்பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து ஒரு கும்பல் கூட்டு பலாத்காரம் செய்தது.

பலத்தகாயங்களுடன் அலங்கோலமான நிலையில், மீட்கப்பட்ட ரஷிய பெண் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்.

இச்சம்பவம் குகுறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் அபார்ட்மெண்ட் நிர்வாகிகள், கார் டிரைவர், ஊழியர்கள் உள்பட 15 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னையில் உள்ள ரஷிய தூதரகத்தின் குடியுரிமை ஆவண (விசா) ஆய்வு பிரிவு அதிகாரி டென்னிசன், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் ரஷிய இளம்பெண்ணை நேரில் சந்தித்தார்.

முகத்தில் வைக்கப்பட்டிருந்த பிராண வாயு மாஸ் எடுக்கப்பட்டு விட்டது. இயல்பாக சுவாசிக்கிறார். பால் மற்றும் ஜூஸ் போன்ற திரவ உணவுகளை உட்கொள்கிறார்.

அவரது உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக ரஷிய தூதரக அதிகாரியிடம் டாக்டர்கள் தெரிவித்தனர். எஸ்.பி. பொன்னி மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளும் வந்திருந்தனர்.

சுயநினைவு திரும்பிய ரஷிய இளம்பெண்ணிடம் தூதரக அதிகாரி சம்பவம் குறித்து கேட்டறிந்தார். அப்போது, பலாத்காரம் குறித்து எஸ்.பி. பொன்னி வாக்கு மூலம் பெற்றார்.

பாதிக்கப்பட்ட அந்த பெண், தனக்கு நேர்ந்த கொடுமையை விவரித்துள்ளார். பலாத்காரம் செய்தவர்கள் குறித்தும் தெரிவித்துள்ளார்.

உணவு மற்றும் குளிர் பானத்தில் மயக்க மருந்து மற்றும் போதை மாத்திரை கலந்து கொடுத்து தன்னை பலாத்காரம் செய்ததாக ரஷிய இளம்பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ரஷிய இளம்பெண்ணின் வாக்குமூலத்தையடுத்து, பலாத்காரம் நடந்த தனியார் அபார்ட்மெண்ட்டுக்கு தாசில்தார் மனோகரன் அதிரடியாக ‘சீல்’ வைத்தார்.

விசாரணை வளையத்தில் உள்ள 15 பேரிடமும் போலீசார், தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர். இது குறித்து எஸ்.பி. பொன்னி கூறியதாவது:-

இந்த வி‌ஷயத்தில் பெண் பாதிக்கப்பட்டுள்ளார். திருட்டு போன்ற மற்ற வழக்கில் உடனடியாக தகவல் தெரிவிப்பது, நடவடிக்கை எடுப்பது போன்று இதில் செய்ய முடியாது.

இந்த வழக்கு தொடர்பாக 15 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது வரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றார். #Russiantouristgirl

Tags:    

Similar News