செய்திகள்

தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட சேலம் மாணவன் 24 மணி நேரத்திற்கு பிறகு சடலமாக மீட்பு

Published On 2018-07-03 03:24 GMT   |   Update On 2018-07-03 03:24 GMT
சேலத்தில் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாணவன் 24 மணி நேரத்திற்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டுள்ளான். #SalemRain #SalemStudentBodyFound
சேலம்:

சேலம் மாநகரில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி விடிய விடிய பெய்த கனமழை பெய்தது. இதன் காரணமாக பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. பொதுமக்கள் இரவு முழுவதும் தூங்காமல் விடிய விடிய தவித்தனர்.

கிச்சிப்பாளையம் நாராயண நகரில் நேற்று அதிகாலையில் மழை பெய்துகொண்டிருந்தபோது சகோதரருடன் வந்த மாணவன் முகமது ஆசாத் (வயது 16) அங்குள்ள கழிவுநீர் ஓடையில் தவறி விழுந்தான். அவனை சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதிக அளவில் தண்ணீர் சென்றதால் அவனை மீட்க முடியவில்லை. அவனை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

மாணவன் தவறி விழுந்த ஓடை பகுதியை நேற்று மாவட்ட கலெக்டர் ரோகிணி பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படும் மாணவனை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதற்காக 7 குழுக்கள் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

இந்நிலையில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மாணவன் 24 மணி நேரத்திற்குப் பிறகு இன்று காலை கருவாட்டுப் பாலத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளான். #SalemRain #SalemStudentBodyFound
Tags:    

Similar News