2025 - ஒரு பார்வை

2025 REWIND: தேர்தல் வியூகத்தில் சிறந்து விளங்கியவர் சொந்த மாநிலத்தில் கோட்டை விட்டது எப்படி?

Published On 2025-12-28 22:34 IST   |   Update On 2025-12-28 22:34:00 IST
  • தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுப்பதில் கிங் மேக்கர் என ஜொலித்தவர் பிரசாந்த் கிஷோர்.
  • பா.ஜ.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி, தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் தேர்தல் வெற்றிக்கு வியூகம் வகுத்துள்ளார்.

புதுடெல்லி:

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த் கிஷோர். இவர் பல்வேறு மாநில அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூக நிபுணராக பணி செய்து ஆட்சியைப் பிடிக்க வழிவகுத்தார்.

ஒரு கட்சிக்கு தேர்தலில் பிரசாரம் முதல் அனைத்தையும் வடிவமைத்துக் கொடுக்கும் பல்வேறு நிறுவனங்கள் உலகெங்கிலும் உள்ளன. சமீப காலமாக இந்தியாவிலும் இந்த முறை இருந்துவருகிறது.

2012-ம் ஆண்டில் குஜராத் சட்டசபைத் தேர்தலில் நரேந்திர மோடிக்காக தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுத்து பிரபலம் அடைந்தார்.

தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுப்பதில் 'கிங் மேக்கர்' என ஜொலித்த பிரசாந்த் கிஷோர் பா.ஜ.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் தேர்தல் வெற்றிக்கு வியூகம் வகுத்துக் கொடுத்தார்.


2012-ம் ஆண்டு - குஜராத் தேர்தல் - நரேந்திர மோடி

2015-ம் ஆண்டு - பீகார் தேர்தல் - நிதிஷ் குமார்

2017-ம் ஆண்டு - பஞ்சாப் தேர்தல் - கேப்டன் அமரிந்தர் சிங்

2019-ம் ஆண்டு - ஆந்திரா தேர்தல் - ஜெகன்மோகன் ரெட்டி

2020-ம் ஆண்டு - டெல்லி தேர்தல் - அரவிந்த் கெஜ்ரிவால்

2021-ம் ஆண்டு - மேற்கு வங்கம் - மம்தா பானர்ஜி

2021-ம் ஆண்டு - தமிழ்நாடு தேர்தல் - முக ஸ்டாலின்

இதுபோன்று தனது உழைப்பால் 10 முதல் மந்திரிகளை உருவாக்கி இருந்தார்.

இதற்கிடையே, தேர்தல் வியூகம் வகுப்பதில் இருந்து விலகிய பிரசாந்த் கிஷோர், 2022-ம் ஆண்டில் ஜன் சுராஜ் என்ற அரசியல் கட்சி தொடங்கினார். பீகார் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியைப் பிடிக்கப் போவதாக அறிவித்தார்.

தனது கட்சியை வளர்ப்பதற்காக பீகாரின் 38 மாவட்டங்களிலும் சுமார் 5,000 கிலோமீட்டர் பாத யாத்திரை மேற்கொண்டு, பல்லாயிரக்கணக்கான பொதுக்கூட்டங்கள் நடத்தினார். தரை வழியாகவே பட்டித்தொட்டி எங்கும் சூறாவளிப் பயணம் மேற்கொண்டார்.

மென்பொறியாளர்கள், பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என நிபுணத்துவம் பெற்ற 1,300 பேர் கொண்ட குழு அமைத்து அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் பரப்புரையை திறம்பட ஒருங்கிணைத்தார்.

சென்ற இடமெல்லாம் மக்கள் ஆதரவு கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்த பிரசாந்த் கிஷோர், பீகாரில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 238 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தார். ஆனால், அவர் மட்டும் தேர்தலில் போட்டியிடவில்லை.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் வெற்றி பெறும். ஜன் சுராஜ் கட்சி ஓரிரு இடங்களில் வெல்லக்கூடும் என தகவல் வெளியானது.


இதுதொடர்பாக பிரசாந்த் கிஷோர் கூறுகையில், ஐக்கிய ஜனதா தளம் 25 இடத்துக்கு மேல் வென்றுவிட்டால் அரசியலை விட்டே விலகுவதாக தடாலடி அறிவிப்பு வெளியிட்டார்.

ஆனால், பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் பிரசாந்த் கிஷோருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜன் சுராஜ் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. அக்கட்சி போட்டியிட்ட 238-ல் 233 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது.

பிரசாந்த் கிஷோர் வசிக்கும் கர்கஹர் சட்டசபைத் தொகுதியில் கூட அவரது கட்சி படுதோல்வி அடைந்தது.

அடிப்படை கள அரசியலுக்கும், வியூக அரசியலுக்கும் இடையே பெரும் வேறுபாடு இருப்பதையே பீகார் தேர்தல் முடிவு உணர்த்தியுள்ளது.

ஒரு தேர்தல் வியூக வகுப்பாளரே சொந்த மாநில தேர்தலில் சறுக்கி இருப்பதுதான் தற்போது பேசுபொருளாகி உள்ளது.

Tags:    

Similar News