செய்திகள்

வேளாங்கண்ணி அருகே நள்ளிரவில் ஜாமீனில் வந்த பிரபல ரவுடி படுகொலை

Published On 2018-07-01 18:35 IST   |   Update On 2018-07-01 18:35:00 IST
ஜாமீனில் வந்த பிரபல ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் நாகை வேளாங்கண்ணி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கீழ்வேளூர்:

நாகை அடுத்த தெற்கு பொய்கைநல்லூர் சவேரியார் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவராமன் (வயது 27). இவர் மீது வேளாங்கண்ணி போலீஸ் நிலையத்தில் இரட்டை கொலை வழக்கு உள்ளது. பிரபல ரவுடியான சிவராமன், கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள பரவை என்ற கிராமத்துக்கு சிவராமன் சென்றார்.

பின்னர் அங்குள்ள ஓட்டலில் அவர் சாப்பிட்டார். அப்போது சாப்பிட்டதற்கு பணம் கொடுக்காமல் வாக்குவாதம் செய்து தகராறு செய்தார். இதையடுத்து பணம் எதுவும் கொடுக்காமல் அந்த ஓட்டலை விட்டு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.

இந்த நிலையில் நள்ளிரவில் சிவராமன், வடவூர் ரோட்டில் தலையில் வெட்டு காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக சென்றவர்கள் இந்த காட்சியை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவராமனை மீட்டு நாகை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி சிவராமன் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் பற்றி தகவல் கிடைத்ததும் வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரவுடி சிவராமன் பரவை கிராமத்தில் உள்ள ஓட்டலில் அடிக்கடி சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் தகராறு செய்வாராம். நேற்றும் இதேபோல் தகராறு செய்ததால் இந்த பிரச்சினையால் சிவராமன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது முன்விரோதம் காரணமாக அவரை மர்ம கும்பல் கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

ஜாமீனில் வந்த பிரபல ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் நாகை வேளாங்கண்ணி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News