செய்திகள்

ரெயில் நிலையங்களில் ‘செல்பி’ எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் - இன்று முதல் அமலுக்கு வருகிறது

Published On 2018-06-22 03:05 IST   |   Update On 2018-06-22 03:06:00 IST
ரெயில் நிலையங்களில் ‘செல்பி’ எடுப்பவர்களிடம் ரூ.2 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும் என்று ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை இன்று முதல் அமலுக்கு வருகிறது. #RailwayStation #Selfie #Fine
மதுரை:

நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் ‘செல்பி’ கலாசாரம் வேகமாக பரவி வருகிறது. இதனை ஒரு விதமான மனநோய் என டாக்டர்கள் கூறுகின்றனர். இந்த மனநோய் ரெயில் பயணிகளையும் விட்டுவைக்கவில்லை.

தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில் கேமராக்கள், வீடியோ கேமராக்களுக்கு பதிலாக செல்போன்கள் மூலம் இத்தகைய காட்சிகளை படமாக்கி மலரும் நினைவுகளாக்க முயலுகின்றனர். ஆனால் சிலர் பாலங்களில் ரெயில் செல்லும் போதும், ரெயில் பெட்டியின் படிக்கட்டில் நின்றவாறும் ‘செல்பி’ எடுக்கின்றனர்.

இதனால், ரெயில்வேயில் அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. தண்டவாளத்தை கடக்கும்போது, ரெயிலில் அடிபட்டு இறப்பவர்களின் எண்ணிக்கையை விட தற்போது, ரெயில் வரும்போது, தண்டவாளத்தின் அருகில் இருந்து ‘செல்பி’ எடுக்கும் போது அடிபட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதனை தடுக்க, ரெயில் நிலையங்கள், தண்டவாள பகுதி, ரெயில் நிலைய வளாகம், பிளாட்பாரங்கள், ரெயில் படிக்கட்டுகள் ஆகியவற்றில் இருந்து ‘செல்பி’ எடுப்பவர்களுக்கு அபராதம் விதிக்க ரெயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. அதன்படி, இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ரெயில் நிலையங்களுக்குள் ஆபத்தான முறையில் ‘செல்பி’ எடுப்பவர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட உள்ளது.

அதேபோல, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரெயில் நிலைய வளாகத்தில் குப்பை தொட்டியை தவிர, பிற இடங்களில் குப்பை கொட்டும் பயணிகளிடம் இருந்து ரூ.500 அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை கோட்டத்தில், அனைத்து ரெயில் நிலையங்களிலும் ‘செல்பி’ எடுப்பவர்கள், குப்பை கொட்டுபவர்களுக்கு உடனடியாக அந்த இடத்திலேயே அபராதம் விதிக்க பறக்கும் படை டிக்கெட் பரிசோதகர்கள் தயாராக உள்ளனர். ஆனால், இது குறித்த அறிவிப்பு பலகைகள் எதுவும் ரெயில் நிலையங்களில் வைக்கப்படவில்லை.  #RailwayStation #Selfie #Fine
Tags:    

Similar News