செய்திகள்

கலைஞர் பொறுத்திருந்து எதை செய்வாரோ அதை செய்வோம் - மு.க.ஸ்டாலின் பேச்சு

Published On 2018-06-18 15:47 IST   |   Update On 2018-06-18 15:47:00 IST
கலைஞர் பொறுத்திருந்து எதை செய்வாரோ அதை செய்வோம் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #MKStalin #Karunanidhi

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் பஸ் நிலையம் எதிரே மறைந்த தி.மு.க. தெற்கு மாவட்ட அவைத் தலைவர் சி.வி.எம்.அ. பொன் மொழியின் படத்திறப்பு விழா நடைபெற்றது.

தெற்கு மாவட்ட அவைத் தலைவர் சுந்தர் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ. அன்பரசன் எம்எல்ஏ முன்னிலை வகித்தனர். மாநில மாணவரணி செயலாளர் எழிலசரன் எம்.எல்.ஏ வரவேற்புரை நிகழ்தினார்.

நிகழ்ச்சியில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பொன் மொழியின் படத்தை திறந்து வைத்து பேசியதாவது:-

தற்போது தமிழ்நாட்டில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அரசு ஊழியர்கள், மாணவர்கள், நெசவாளர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் போராடி வருகின்றனர். ஆனால் நாட்டு மக்களைப் பற்றி இந்த அரசுக்கு கவலை இல்லை. சமீபத்தில் மக்கள் நீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பினை ஆவலோடு எதிர்ப்பார்த்திருந்தனர். ஆனால் அந்தத் தீர்ப்பு வேடிக்கையாகவும் விசித்திரமாகவும் இருந்தது. இன்னும் சொல்லப் போனால் நாட்டு மக்களுக்கு ஆபத்தாக இருந்தது.

18 எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிப்பு வழக்கில் அவர்கள் அரசினை எதிர்த்து வாக்களிக்கவில்லை. முதல்வரை மாற்ற வேண்டும் என்றுதான் கவர்னரிடம் மனு அளித்தனர். அதற்காக அவர்களது பதவி பறிக்கப்பட்டுள்ளது.

ஆனால் 11 எம்.எல்.ஏ.க் கள் அரசினை எதிர்த்து வாக்களித்தனர். அவர்கள் இன்று துணை முதல்வராகவும் அமைச்சர்களாகவும் உள்ளர். 18 எம்.எல்.ஏ க்கள் வழக்கில் மாறுபாடான தீர்ப்பு வந்திருக்கிறது.

ஆர்.கே. நகர் தொகுதியில் ஜெயலலிதா இறந்து 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் சுயேட்சை வேட்பாளர் தினகரன் வெற்றி பெற்றார். இதுதான் இடைத் தேர்தல் விதிமுறை. ஆனால் 18 எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிக்கப்பட்டு 10 மாதங்களாக அத்தொகுதிகள் அனாதை ஆக்கப்பட்டள்ளன.

இதற்குக் காரணம் மத்தியில் ஆளும் மோடி அரசே என பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன்.

மக்களிடம் இருக்கக்கூடிய உணர்வுகள் எல்லாம், நீங்கள் எப்போது ஆட்சி வரப்போகிறீர்கள் என்று கேட்பவர்களை விட, எப்போது இந்த ஆட்சியை கவிழ்க்கப்போகிறீர்கள் என்ற கேள்விதான். அத்தோடு இல்லை, இன்னொன்றும் சொல்கிறார்கள், தலைவர் இருந்தால் விட்டிருக்க மாட்டார். இந்நேரம் முடிதிருப்பார் என்று சொல்லுகிறார்கள். அவர்கள் எல்லாம் தலைவர் கலைஞரை பார்த்தவர்கள், நாங்கள் கலைஞரோடு பழகிக் கொண்டிருக்கக்கூடியவர்கள். கலைஞர் அவர்கள் எங்களைப் பக்குவப்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள்.

கலைஞர் அவர்கள் எப்போது எதை செய்வார் என்று நாங்களும் தெரிந்து வைத்திருக்கிறோம். எனவே, விரைவிலே கலைஞர் பொறுத்திருந்து எதைச் செய்வாரோ நாங்களும் பொறுத்திருந்து செய்ய காத்திருக்கிறோம். எனவே, மக்களாகிய நீங்களும் தயாராக இருங்கள்

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம், கழக வர்த்தக அணி துணைத் தலைவர் வி.எஸ்.ராம கிருஷ்ணன்,வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய செயலாளர் சிறுவேடல் செல்வம், காஞ்சி ஒன்றிய கழகப் பொருளாளர் தசரதன், நிர்வாகிகள் பி.எம்.குமார், சுகுமார், ஜெகந் நாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #MKStalin #Karunanidhi

Tags:    

Similar News