செய்திகள்
விக்னேஷ்-பரமசிவம்

விக்கிரவாண்டி அருகே விபத்து- 2 வாலிபர்கள் மரணம்

Published On 2018-06-14 10:41 IST   |   Update On 2018-06-14 10:41:00 IST
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விக்கிரவாண்டி:

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ்(வயது 19). அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் பரமசிவம்(19) இவர்கள் 2 பேரும் ஏ.சி.மெக்கானிக் படித்து விட்டு வேலை பார்த்து வந்தனர்.

விக்னேஷ், பரமசிவம் இருவரும் மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு செல்ல முடிவு செய்தனர். அதன்படி நேற்று அவர்கள் ஒரே மோட்டார் சைக்கிளில் கண்டமங்கலத்தில் இருந்து மேல்மலையனூர் நோக்கி புறப்பட்டனர்.

மோட்டார் சைக்கிளை விக்னேஷ் ஓட்டி சென்றார். பரமசிவம் பின்னால் அமர்ந்திருந்தார். விக்கிரவாண்டி அருகே ஒரத்தூர் லட்சுமிபுரம் கூட்டுசாலை வளைவில் விக்னேஷ் மோட்டார் சைக்கிளை திருப்பினார். அப்போது அந்த வழியாக செஞ்சியில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக திடீரென்று விக்னேசின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கிவீசப்பட்ட விக்னேசும், பரமசிவனும் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் விக்னேஷ், பரமசிவம் ஆகிய 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

இந்த விபத்து குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் வாலிபர்கள் 2 பேர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews

Tags:    

Similar News