செய்திகள்

ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு

Published On 2018-06-13 08:36 GMT   |   Update On 2018-06-13 08:36 GMT
ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் வெங்காய விலை திடீரென உயர்ந்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஒட்டன்சத்திரம்:

தென்தமிழகத்தின் மிகப்பெரிய மார்க்கெட்டாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட் உள்ளது. கள்ளிமந்தயம், காவேரியம்மாபட்டி, மூலசத்திரம், சத்திரப்பட்டி, கேதையெறும்பு, அத்திக்கோம்பை, ஒட்டன்சத்திரம், தாராபுரம் உள்ளிட்ட இடங்களில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு கொண்டு வருகின்றனர்.

இங்கிருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் கேரள மாநிலத்திற்கும் அதிக அளவு காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வெங்காய விலை குறைந்தே காணப்பட்டது. இதனால் விவசாயிகள் பட்டறைகளில் வெங்காயங்களை பதுக்கி வைத்தனர்.

மேலும் குறைந்த அளவே விலை போனதால் அவர்கள் கவலையில் இருந்தனர். தற்போது ரம்ஜான் பண்டிகை வர உள்ளதையொட்டி பிரியாணி மற்றும் தயிர் பச்சடி தயாரிக்க வெங்காயம் முக்கிய தேவையாக உள்ளது. இதற்காக கேரள மாநிலத்திற்கு அதிக அளவு வெங்காயங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மேலும் வரத்தும் குறைந்துள்ளளது. 60 டன் வரவேண்டிய இடத்தில் 40 டன் மட்டுமே வெங்காயம் வந்துள்ளது. இதனால் தற்போது ஒரு கிலோ ரூ.42 வரை விலைபோனது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் தாங்கள் பட்டறையில் வைத்திருந்த வெங்காயங்களையும் மார்க்கெட்டுக்கு கொண்டு வந்தனர். வெங்காய விலை மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்ட நாட்களுக்கு பிறகு விலை ஓரளவு கட்டுப்படியானதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனால் கேரளா, கோவை ஆகிய பகுதிகளுக்கு லாரி மூலம் அதிக அளவு வெங்காயங்கள் அனுப்பப்படுகிறது. மேலும் வியாபாரிகளும் அதிக அளவு கொள்முதல் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News