செய்திகள்

ராதாபுரம் அருகே கிணற்றில் வீசி மூதாட்டியை கொன்ற தொழிலாளி

Published On 2018-06-08 11:42 GMT   |   Update On 2018-06-08 11:42 GMT
ராதாபுரம் அருகே குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மூதாட்டியை கிணற்றில் வீசி கொன்ற தொழிலாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லை:

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள வி.என்.குளம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்புலட்சுமி (வயது 80). இவரது கணவர் சுவாமிதாஸ் இறந்துவிட்டார். அவரது 3மகள்கள் திருமணமாகி வெளியூரில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இதனால் சுப்புலட்சுமி மட்டும் தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் அவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த தொழிலாளி ஆனந்தராஜின் மனைவி ஜெயக்கொடி என்பவருக்குமிடையே பொது குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் முன்விரோதம் இருந்துவந்தது. நேற்றுமாலை ஜெயக்கொடி தெருவில் உள்ள பொதுக்குழாயில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு மூதாட்டி சுப்புலட்சுமியும் தண்ணீர் பிடிக்க சென்றார். அந்த நேரத்தில் அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. உடனே அருகில் உள்ளவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஜெயக்கொடி தனது கணவர் ஆனந்தராஜிடம் (48) கூறினார். இதில் ஆத்திரம் அடைந்த ஆனந்தராஜ் சுப்புலட்சுமியின் வீட்டிற்கு சென்றார்.

அங்கு வீட்டில் தனியாக இருந்த சுப்புலட்சுமியை அவர் தாக்கினாராம். பின்னர் அவரை அலேக்காக தூக்கிச் சென்று ஊருக்கு அருகில் உள்ள கிணற்றுக்குள் வீசினார். அந்த கிணற்றில் தண்ணீர் இல்லாததால் தலையில் அடிபட்டு சுப்புலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து ஆனந்தராஜ் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இது குறித்து ராதாபுரம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் கிடந்த சுப்புலட்சுமியின் உடலை மீட்டனர்.

பின்னர் பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து ராதாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ஆனந்தராஜை தேடி வருகின்றனர்.

ஆனந்தராஜ் மீது ஏற்கனவே அவரது தந்தையை கொலை செய்த வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #Tamilnews
Tags:    

Similar News