செய்திகள்
மாணவி மகாலட்சுமி

விருத்தாசலம் அருகே பள்ளி வளாகத்தில் மயங்கி விழுந்து 8-ம் வகுப்பு மாணவி பலி

Published On 2018-06-07 10:30 GMT   |   Update On 2018-06-07 10:30 GMT
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பள்ளி வளாகத்தில் மயங்கி விழுந்து 8-ம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
விருத்தாசலம்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள சு.கீணனூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகரன்(வயது 40).

இவரது மகள் மகாலட்சுமி(13) இவர் கம்மாபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்தநிலையில் இன்று காலை 8.30 மணியளவில் மகாலட்சுமி பள்ளிக்கூடத்துக்கு சென்றார். அங்குள்ள பள்ளி வளாகத்தில் நின்றுகொண்டிருந்தபோது திடீரென்று மயங்கி விழுந்தார். உடனே அங்கு இருந்த மற்ற சக மாணவ-மாணவிகள் அவரை மீட்டு கம்மாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு பணியில் இருந்த நர்சு, மகாலட்சுமியின் உடலை பரிசோதனை செய்து பார்த்தபோது அவர் இறந்து விட்டதாக கூறினார்.

மகாலட்சுமி இறந்த தகவல் அவரது பெற்றோருக்கும், உறவினருக்கும் தெரியவந்தது. அவர்கள் அலறியடித்துக்கொண்டு கம்மாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு திரண்டு வந்தனர். மகாலட்சுமியின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் இல்லாததால் மாணவி மகாலட்சுமி இறந்து விட்டதாக அவர்கள் குற்றம்சாட்டினார்கள். பின்னர் அவர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதற்கிடையே மாணவி இறந்ததை தொடர்ந்து அவருடன் படித்து வந்த மாணவ, மாணவிகள் விருத்தாசலம்- பரங்கிப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் ராஜாதாமரை பாண்டியன் தலைமையில் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர். அங்கு மறியலில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர்.

இதனைத்தொடர்ந்து போலீசார் மறியலில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளை வலுக்கட்டாயமாக இழுத்து அப்புறப்படுத்தினர்.

இந்தசம்பவத்தால் அந்த பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. #Tamilnews
Tags:    

Similar News