செய்திகள்
ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் - ஒரு நபர் கமி‌ஷன் விசாரணை தொடக்கம்

Published On 2018-06-04 10:04 IST   |   Update On 2018-06-04 10:04:00 IST
துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரி நீதிபதி அருணா ஜெகதீசனை கொண்ட ஒரு நபர் கமி‌ஷன் விசாரணை தூத்துக்குடியில் இன்று தொடங்கியது. #Thoothukudifiring #Arunajagadeesan
தூத்துக்குடி:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22-ந்தேதி பொதுமக்கள் நடத்திய போராட்டம் மோதலில் முடிந்தது. போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

பலியானவர்களில் சண்முகம், செல்வசேகர், கார்த்திக், கந்தையா, காளியப்பன், ஸ்னோலின், தமிழரசன் ஆகிய 7 பேர்களின் உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அந்தோணி செல்வராஜ், கிளாஸ்டன், ஜான்சி, மணிராஜ், ரஞ்சித் குமார், ஜெயராமன் ஆகிய 6 பேர்களின் உடல்கள் ஐகோர்ட்டு உத்தரவின்படி வருகிற 6-ந்தேதிக்கு பிறகு பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது.

இந்தநிலையில் முதலில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட 7 பேர்களின் உடல்களையும் மறுபிரேத பரிசோதனை செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதனடிப்படையில் புதுவை ஜிப்மர் டாக்டர் அம்பிகா பிரசாத் பத்ரா தலைமையிலான குழுவினர், நீதிபதிகள் முன்னிலையில் 7 பேர் உடலையும் மறு பிரேத பரிசோதனை செய்தனர்.

இதைத்தொடர்ந்து அவர்களது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக கடந்த 2-ந்தேதி மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர்களான ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சித்தரஞ்சன் மோகன்தாஸ், ஓய்வு பெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன், சத்யபிரியா, பாலகிருஷ்ண பிரபு, மாநில மனித உரிமை ஆணையர் உதவி பதிவாளர் வாசுதேவன் ஆகியோர் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தினார்கள்.

இதன் தொடர்ச்சியாக அன்று மாலையே டெல்லியில் இருந்து தேசிய மனித உரிமை ஆணையக்குழு மூத்த போலீஸ் சூப்பிரண்டு புபுல் பிரிட்டோ பிரசாத் தலைமையில், உறுப்பினர்கள் ரஜ்வீர்சிங், நிதின்குமார், அருண் தியாகி, லால்பகர் ஆகியோர் தூத்துக்குடிக்கு வந்தனர்.

தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடந்த இடங்களை பார்வையிட்டனர். துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயம் அடைந்தவர்களை நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டார்கள். மேலும் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி உள்ளிட்ட அதிகாரிகளிடமும் ஆலோசனை நடத்தப்பட்டது. தொடர்ந்து வருகிற 7-ந்தேதி வரை விசாரணை நடைபெறுகிறது.



இந்த நிலையில் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசால் நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரி ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனை கொண்ட ஒரு நபர் கமி‌ஷன் விசாரணை தூத்துக்குடியில் இன்று தொடங்கியது.

இதற்காக நீதிபதி அருணாஜெகதீசன் இன்று காலை விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். முதலில் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்திற்கு சென்ற அவர் கலெக்டர் சந்தீப் நந்தூரி மற்றும் தென் மண்டல ஐ.ஜி. சைலேஷ்குமார் யாதவ், நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கார், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதைத்தொடர்ந்து அவர் முறைப்படி விசாரணையை தொடங்கினார். அவர் துப்பாக்கி சூடு நடந்த இடங்கள், கலவரத்தில் சேதப்படுத்தப்பட்ட வாகனங்களை பார்வையிடுகிறார். பின்பு அவர் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினரிடம் நடந்த சம்பவங்கள் குறித்து விசாரணை மேற்கொள்கிறார்.

காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களிடமும், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்களிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது. இதற்காக தூத்துக்குடி பழைய விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் விசாரணை அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அலுவலகத்தில் நீதிபதி அருணா ஜெகதீசன் துப்பாக்கி சூடு தொடர்பாக பொதுமக்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து மனுக்கள் பெறுகிறார்.

மேலும் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அவரவருக்கு தெரிந்த தகவல்களை விசாரணை அலுவலகத்தில் நீதிபதி அருணா ஜெகதீசனிடம் தெரிவிக்கலாம் என்றும், சென்னையில் உள்ள மனித உரிமை ஆணைய தலைமை அலுவலகத்திலும் நேரிலோ அல்லது தபால் மூலமோ வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  #Thoothukudifiring  #Arunajagadeesan



Tags:    

Similar News