செய்திகள்

அரசு நிவாரண தொகையை வாங்க பலியானோர் குடும்பத்தினர் மறுப்பு

Published On 2018-05-26 08:26 GMT   |   Update On 2018-05-26 08:28 GMT
தூத்துக்குடியில் நடத்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு வழங்கிய அரசு நிவாரண தொகையை வாங்க பலியானோர் குடும்பத்தினர் மறுத்து விட்டனர்.
தூத்துக்குடி:

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22ந் தேதி தூத்துக்குடியில் போராட்டம் வெடித்தது. அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். இதில் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குறுக்குச்சாலையை சேர்ந்த தொழிலாளி தமிழரசனும் (வயது 45) ஒருவர் ஆவார். துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

இந்த நிலையில் ஓட்டப்பிடாரம் தாசில்தார் ஜான்சன் தேவசகாயம் மற்றும் அதிகாரிகள் குறுக்குச்சாலையில் உள்ள தமிழரசன் வீட்டிற்கு சென்றனர். அங்கிருந்த குடும்பத்தினரிடம், உங்களது குடும்பத்துக்கு அரசு அறிவித்த ரூ.10 லட்சம் நிவாரண தொகை வந்துள்ளது. மேலும் உங்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

நிவாரண தொகையை தாசில்தார் அலுவலகத்தில் வந்து பெற்றுக் கொள்ளுங்கள் என்று தெரிவித்தனர். ஆனால் தமிழரசன் குடும்பத்தினர், அரசு அறிவித்த நிவாரண தொகை எங்களுக்கு வேண்டாம். அதை நாங்கள் வாங்க மாட்டோம் என்று தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகள் அங்கு இருந்து சென்று விட்டனர்.

இதுகுறித்து தமிழரசன் குடும்பத்தினர் கூறுகையில், எங்களுக்கு அரசு நிவாரண உதவி உள்பட எந்த ஒரு உதவியும் தேவையில்லை. அதற்கு பதிலாக ஸ்டெர்லைட் ஆலையை மூடினாலே போதும். அதுவே அரசு எங்களுக்கு செய்யும் பெரும் உதவி என்றனர்.

இதேபோல் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனும், தமிழரசன் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிவாரண உதவியாக ரூ.3 லட்சத்தை வழங்கினார். ஆனால் அதனையும் அவரது குடும்பத்தினர் வாங்க மறுத்துவிட்டனர்.

Tags:    

Similar News