செய்திகள்

இறந்த‌தாக கூறப்பட்ட முதியவர் உயிருடன் வந்து ஓய்வூதியம் கேட்டார்

Published On 2018-05-17 07:11 GMT   |   Update On 2018-05-17 07:11 GMT
கயத்தாறு தாலுகா அலுவலகத்தில் இறந்ததாக சான்றிதல் வழங்கப்பட்ட முதியவர் ஓய்வுதியம் கேட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கயத்தாறு:

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள பன்னீருத்து கிராமத்தை சேர்ந்தவர் குருசாமி(வயது85). முன்னாள் பஞ்சாயத்து தலைவரான இவர் வர்மக்கலை படித்தவர். வயதான காலத்தில் இவருக்கு அரசு சார்பாக முதியோர் பென்சன் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் குருசாமிக்கு வரவேண்டிய முதியோர் பென்சன் திடீரென நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த குருசாமி கயத்தாறு தாலுகா அலுவலகத்துக்கு சென்று கேட்டார். அதற்கு தாலுகா அலுவலக அதிகாரிகள் சரியான பதில் கூறவில்லை.

இதையடுத்து அவர் தூத்துக்குடி கலெக்டர் வெங்கடேசிடம் மனு கொடுத்தார். பின்பு முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் அவர் மனு அனுப்பினார். இதுபற்றி விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து கோவில்பட்டி ஆர்.டி.ஓ அனிதா இதுபற்றி விசாரணை நடத்தினார். அப்போது கயத்தாறு தாலுகா அலுவலகத்தில் உள்ள பதிவேட்டில் குருசாமி இறந்துவிட்டார் என அங்குள்ள கிராம நிர்வாக அதிகாரி அறிக்கை கொடுத்து பதிவு செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து குருசாமி மீண்டும் தாலுகா அலுவலகம் சென்று தனக்கு முதியோர் பென்சன் நிறுத்தப்பட்டது ஏன் என கேட்டார். அதற்கு அதிகாரிகள் நீங்கள் இறந்து விட்டீர்கள். அதனால் உங்களுக்கு பென்சன் கிடையாது என்றார்களாம். இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குருசாமி மீண்டும் மனு கொடுத்தார். அதற்கு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்கப்பட்டது. அதன்பிறகே அதிகாரிகள் தங்கள் தவறு செய்ததாக கலெக்டர் அலுவலகத்துக்கு பதில் அளித்துள்ளனர். சம்பந்தப்பட்ட குருசாமிக்கும் தகவல் அனுப்பியுள்ளனர்.#tamilnews
Tags:    

Similar News