செய்திகள்
கூட்டத்தில் ராமதாஸ் பேசிய போது எடுத்த படம்.

தமிழகத்தில் பணநாயகம் தலைதூக்கி வருகிறது - ராமதாஸ்

Published On 2018-03-26 12:07 IST   |   Update On 2018-03-26 12:07:00 IST
தமிழகத்தில் பணநாயகம் தலைதூக்கி வருகிறது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
மயிலாடுதுறை:

நாகை மாவட்டம் மயிலாடு துறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேளாண் நிழல் நிதி அறிக்கை பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. கூட்டத்துக்கு மாநில துணை பொதுச்செயலாளர் பழனிச்சாமி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

நஞ்சையும், புஞ்சையும் கொஞ்சி விளையாடிய தஞ்சை பூமி இன்றைக்கு பாலைவனமாக மாறும் சூழல் ஏற்படும். மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை என்றால் பாலைவனமாக மாறும்.

மேலும் காவிரி மேற்பார்வை குழு அமைப்பது என்பது பசிக்கு பஞ்சு மிட்டாய் வழங்கும் கதையாகி விடும். நாங்கள் இந்த குழு அமைப்பதை கண்டிக்கிறோம். எதிர்த்து போராடுவோம். ஆனால் தமிழக அரசு எதிர்க்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது. தமிழக மக்கள் இதற்கான நீதிபெறாமல் விட மாட்டார்கள். பா.ம.க. இறுதிவரை போராடும்.

வெளிநாட்டில் இருந்து தொழில் தொடங்க தமிழகத்துக்கு வருபவர்கள் தமிழகத்தில் கேட்கும் லஞ்சத்துக்கு பயந்து போய் ஓடிவிடுகிறார்கள். இந்தியாவில் 73 சதவீத சொத்துகள் 1 சதவீத மக்களிடம் உள்ளது. இதுதான் தற்போதைய நாட்டின் நிலைமை.

தற்போது வயதாகி விட்ட நடிகர்கள், பட வாய்ப்புகளை இழந்த நடிகர்கள் அரசியல்களத்தை நோக்கி திருப்புகின்றனர். ஒரு நடிகர் எம்.ஜி.ஆர். ஆட்சி அமைக்க போகிறோம் என்கிறார். எம்.ஜி.ஆர். ஆட்சி நாட்டுக்கு நல்லது செய்ததா? அல்லது ஜெயலலிதா தான் நல்லது செய்தாரா? இல்லை.

ஜெயலலிதாவால் 2011-ல் விரட்டப்பட்டு புதுச்சேரியில் இருந்த தினகரன் இன்றைக்கு கட்சியை பிடித்து ஆட்சியை பிடிக்க பார்க்கிறார். பணத்தால் வாக்குகளை வாங்கிவிடலாம் என்று கனவு காண்கிறார். பணநாயகம் தமிழகத்தில் தலைதூக்கி வருகிறது. தமிழகத்தை உண்மையில் நல்ல மாநிலமாக மாற்றுவதற்கு திட்டமும், செயல்படும் திறமையும் கொண்ட ஒரே கட்சி பா.ம.க. மட்டும் தான். அனைத்து திறமைகளையும் ஒருங்கே பெற்றவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தான்.

இவ்வாறு அவர் கூறினார்.  #tamilnews



Similar News