செய்திகள்
அபயாம்பிகை அம்மனுக்கு சுடிதார் அணிவித்துள்ளதை படத்தில் காணலாம்.

மயிலாடுதுறை கோவிலில் சுடிதார் அணிவித்து அம்மனுக்கு வழிபாடு

Published On 2018-02-05 11:41 IST   |   Update On 2018-02-05 11:41:00 IST
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள கோவிலில் அம்மனுக்கு சுடிதார் அணிவித்து வழிபாடு நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை:

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான அபயாம்பிகை சமேத ஸ்ரீமாயூரநாதர் கோவில் உள்ளது.

பிரசித்திபெற்ற இக்கோவிலில் மாயூரநாதர் லிங்க வடிவிலும், அபயாம்பிகை தனி சன்னதியிலும் அருள் பாலித்து வருகின்றனர்.

இக்கோவிலில் தை வெள்ளியை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை அபாயாம்பாள் அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இந்த அலங்காரத்தை ராஜ் என்ற அர்ச்சகர் செய்திருந்தார்.

பின்னர் மாலையில் நடைபெற்ற சந்தன அலங்காரத்திற்கு திடீரென்று சுடிதார் அணிவித்து பூஜை செய்துள்ளார். இதைக் கண்ட பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த காட்சியை கண்ட ஒருசில பக்தர்கள் தங்களது செல்போன் மூலம் சுடிதார் அணிந்த நிலையில் காட்சிதந்த அபாயம்பிகையை படம் எடுத்துள்ளனர். அம்மன் சுடிதார் அணிந்துள்ள படத்தை சிலர் வாட்ஸ்அப் மூலம் நண்பர்களுக்கு அனுப்பியுள்ளனர்.

இதனால் அம்மனுக்கு சுடிதார் அணிவித்து வழிபாடு நடத்திய சம்பவம் பரபரப்பாக வெளியானதால் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தமிழ்நாடு திருக்கோவில் திருமடங்கள் பாதுகாப்புப் பேரவை பொதுச்செயலாளர் அழகிரிசாமி கூறியதாவது:- 7-ம் நூற்றாண்டில் சுயம்புவாக உருவெடுத்த அபயாம்பிகைக்கு இந்து கலாச்சாரத்தை கொச்சைப்படுத்தும் வகையில் சுடிதார் அணிவித்து பூஜை செய்தது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து திருவாவடுதுறை ஆதீனம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews

Similar News