செய்திகள்

சோமாஸ் கந்தர் சிலை செய்ததில் முறைகேடு: தலைமறைவான ஸ்தபதி வெளிநாடு தப்பி ஓட்டம்?

Published On 2018-01-31 06:50 GMT   |   Update On 2018-01-31 06:50 GMT
காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சோமாஸ் கந்தர் சிலை செய்ததில் முறைகேடு தொடர்பாக தலைமறைவான ஸ்தபதியை விரைவில் பிடிக்க போலீசார் அதிரடி வியூகம் வகுத்து வருகிறார்கள்.
காஞ்சீபுரம்:

பிரசித்தி பெற்ற காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் புதிதாக செய்யப்பட்ட சோமாஸ்கந்தர் சிலையில் தங்கம் ஏதும் இல்லை என்று ஆய்வில் தெரிய வந்தது.

இந்நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் பெரிய காஞ்சீபுரம் காவல் நிலையம், ஏகாம்பரநாதர் கோவில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் கோவில் செயல் அலுவலர் உள்ளிட்டோர்களிடம் அதிரடி விசாரணை நடத்தினார்.

இந்த சிலை விவகாரத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இந்தநிலையில் புதிய சிலையினை செய்த ஸ்தபதி முத்தையா திடீரென தலைமறைவானார்.

போலீஸ் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து தேடி வந்தனர். அவருக்கு அடைக்கலம் தருபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்து உள்ளனர். இதற்கிடையே ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் நேற்று திடீரென காஞ்சீபுரம் வந்தார். காஞ்சீபுரம் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஸ்தபதி முத்தையாவின் உறவினர்கள் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் கிடைத்த தகவல்கள் குறித்து ஏதும் வெளியிடப்படவில்லை. இதனை வைத்து ஸ்தபதி முத்தையாவை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே தலைமறைவான ஸ்தபதி முத்தையா வெளிநாடு தப்பி சென்றிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவர் சிக்கினால்தான் இந்த சிலை விவகாரத்தில் பின்னணியில் உள்ளவர்கள் யார்? யார்? என்பது தெரிய வரும்.

எனவே ஸ்தபதியை விரைவில் பிடிக்க போலீசார் அதிரடி வியூகம் வகுத்து வருகிறார்கள். இதனால் சிலை மோசடி விவகாரம் தற்போது சூடுபிடித்துள்ளது. #tamilnews

Tags:    

Similar News