செய்திகள்

மாமல்லபுரம் அடுக்குமாடி குடியிருப்பில் கல்லூரி மாணவிகள் குளிப்பதை வீடியோ எடுத்த மாணவர்

Published On 2018-01-31 12:19 IST   |   Update On 2018-01-31 12:19:00 IST
மாமல்லபுரம் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் தனியார் கல்லூரி மாணவிகள் குளிப்பதை மாணவர் ஒருவர் வீடியோ எடுத்ததாக வெளியான தகவல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:

மாமல்லபுரத்தை அடுத்த மணமையில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இங்கு படிக்கும் சுமார் 40-க்கும் மேற்பட்ட மாணவிகள் பூஞ்சேரி கூட்டுரோடு அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து விடுதி போல் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதே அடுக்குமாடி குடியிருப்பில் அதே கல்லூரியில் படிக்கும் மாணவர்களும் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளனர்.

இந்த நிலையில் மாணவிகள் குளிப்பதை ஜன்னல் வழியாக மாணவர் ஒருவர் வீடியோ எடுத்து இருப்பதாக தகவல் பரவியது. மேலும் அதனை லேப்டாப்பில் பதிவு செய்திருப்பதும் தெரிய வந்தது.

இதனை அறிந்த மாணவிகள் குடியிருப்பில் வசிப்பவர்களிடம் தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த அவர்கள் சந்தேகத்திற்கிடமான மாணவனின் அறைக்கு சென்று பார்த்தனர்.

அப்போது அவர் மாயமாகி இருப்பது தெரிந்தது. இது பற்றி மாமல்லபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

மாயமான மாணவர் ஆந்திரா மாநிலம் சித்தூரை சேர்ந்தவர் என்பது தெரிந்தது. அவர் விட்டுச் சென்ற லேப்டாப்பை போலீசார் சோதனை செய்ய முயன்றனர். ஆனால் அதில் பாஸ்வேர்டு போடப்பட்டிருந்ததால் அதில் இருப்பதை பார்க்க முடியவில்லை.

இது தொடர்பாக ஆந்திர மாணவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். அதன் பின்னர் தான் மாணவிகள் குளிப்பதை வீடியோ படம் எடுத்தாரா என்பது பற்றிய விவரம் தெரிய வரும்.

அவருடன் தங்கி இருக்கும் நண்பர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. #Tamilnews

Similar News