செய்திகள்
காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் புதிதாக செய்த சோமஸ்கந்தர் சிலையில் எள்ளளவு கூட தங்கம் இல்லை
காஞ்சீபுரம் ஏகாம்பர நாதர் கோவிலில் புதிதாக செய்த சோமஸ்கந்தர் சிலையில் எள்ளளவு கூட தங்கம் இல்லை என்று போலீஸ் அதிகாரி அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோவிலில் இருந்த பழமையான சோமஸ்கந்தர் சிலை சேதம் அடைந்து காணப்பட்டது. அதை பயன்படுத்த முடியாது என்பதால் புதிய சிலை செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கு அறநிலையத்துறையும் அனுமதி அளித்தது.
அந்த சிலையை செய்ய பக்தர்களிடம் இருந்து தங்கம் காணிக்கையாக பெறப்பட்டது. இதையடுத்து 5¾ கிலோ தங்கத்தால் கும்பகோணத்தை அடுத்த சுவாமிமலையில் தலைமை ஸ்தபதி முத்தையா தலைமையில் சிலை செய்யப்பட்டது. 2015-ம் ஆண்டு சோமஸ்கந்தர் சிலை உற்சவர் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டது.
அப்போது பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட தங்கத்தில் முறைகேடு நடந்ததாகவும், பக்தர்களுக்கு தெரியும்படி விமரிசையாக கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் சிலை தயாரிப்பில் முறைகேடு நடந்து உள்ளதாக காஞ்சீபுரம் குற்றவியல் கோர்ட்டில் அண்ணாமலை என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி மீனாட்சி இதனை விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் சிலை செய்த தலைமை ஸ்தபதி முத்தையா, கோவில் செயல் அலுவலர் முருகேசன், கோவில் ஸ்தானிகர் ராஜப்பா ஆகியோரை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்தனர்.
இதனிடையே சிலை கடத்தல் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி தலைமையில் போலீசார், ஏகாம்பரநாதர் கோவிலில் ஏற்கனவே காணாமல் போன சிலைகள், ஆபரணங்கள் குறித்து நேற்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் நிருபர்களிடம், ரகுபதி கூறியதாவது:-
காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் புதிதாக செய்யப்பட்ட சோமஸ்கந்தர் சிலை இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பி.எம்.ஐ. என்ற அமெரிக்க எந்திரம் மூலம் சோதனை செய்யப்பட்டது. அந்த சிலையில் எள்ளளவு கூட தங்கம் இல்லை.
இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் தகவலின்படி அந்த சிலையில் 5¾ கிலோ தங்கம் இருக்க வேண்டும். எனவே இது தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. விசாரணை முடிவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த தகவல் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews