செய்திகள்

ஆங்கில புத்தாண்டையொட்டி வண்டலூர் பூங்காவில் குவிந்த பொதுமக்கள்

Published On 2018-01-02 09:24 IST   |   Update On 2018-01-02 09:24:00 IST
ஆங்கில புத்தாண்டையொட்டி வண்டலூர் பூங்காவில் பொதுமக்கள் குவிந்தனர். நேற்று மட்டும் 24 ஆயிரத்து 280 பேர் பூங்காவை சுற்றிப்பார்த்து உள்ளனர்.
வண்டலூர்:

சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள நடுத்தர மக்கள் குறைந்த பட்ஜெட்டில் குடும்பத்துடன் சுற்றி பார்க்கக்கூடிய சுற்றுலா தலம் வண்டலூர் உயிரியல் பூங்கா என்று கூறலாம். வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா பூங்காவுக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

ஆங்கில புத்தாண்டு என்பதால் நேற்று சென்னை, தாம்பரம், வேளச்சேரி, மேடவாக்கம், சைதாப்பேட்டை, தி.நகர், கிண்டி, வடபழனி, கோயம்பேடு, பூந்தமல்லி, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, மாமல்லபுரம் உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து கூட்டம் கூட்டமாக பொதுமக்கள், குடும்பத்துடன் வந்து வண்டலூர் பூங்காவில் குவிந்தனர்.

அவர்கள் தங்கள் குடும்பத்துடன் பூங்காவில் உள்ள சிங்கம், புலி, யானை, கரடி, நீர்யானை, சிறுத்தை மற்றும் பறவைகள் ஆகியவற்றை சுற்றிப்பார்த்து ரசித்து, புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள்.

புத்தாண்டு தினமான நேற்று மட்டும் வண்டலூர் பூங்காவை 24 ஆயிரத்து 280 பேர் சுற்றிப்பார்த்தனர். வண்டலூர் பூங்காவை சுற்றிப்பார்த்த பின்னர் பொதுமக்கள் அங்கிருந்து அருகில் உள்ள கோவளம், மாமல்லபுரம், கடற்கரையை நோக்கி சென்றனர்.

புத்தாண்டு தினத்தில் பூங்காவுக்கு கூட்டம் அதிகமாக வரும் என்பதால் பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டனர். பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட வசதிகளும் பூங்கா நிர்வாகம் செய்து இருந்தது. பொதுமக்கள் எந்தவிதமான சிரமமும் இன்றி வந்து செல்வதற்காக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் இணைந்து பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான சிறப்பு பஸ்களை இயக்கியது.

2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ந் தேதி ‘வார்தா’ புயலில் சிக்கி வரலாறு காணாத அளவுக்கு வண்டலூர் உயிரியல் பூங்கா சேதம் அடைந்ததால், கடந்த ஆண்டு ஆங்கில புத்தாண்டு அன்று பூங்கா திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews

Similar News