செய்திகள்
விமல்ராஜ் - ராஜேஷ்

புயலில் மாயமாகி 60 நாட்களாக கரை திரும்பாததால் 2 மீனவர்களுக்கு இறுதி அஞ்சலி

Published On 2017-12-25 09:09 GMT   |   Update On 2017-12-25 09:09 GMT
ஒக்கி புயலில் மாயமாகி 60 நாட்களாக கரை திரும்பாததால் 2 மீனவர்களுக்கு உறவினர்கள் மற்றும் மீனவ கிராம மக்கள் அமைதி ஊர்வலம் சென்று கடலில் பால் தெளித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

சீர்காழி:

நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த கடலோர கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் வங்க கடலில் சரியாக மீன் கிடைக்காததால் கேரளாவில் தங்கி மீன் பிடித்தொழில் செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் ஏற்பட்ட ஒக்கி புயலில் சிக்கி இப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் பலர் மாயமாகினர்.

கடல் சீற்றம் தணிந்துள்ள நிலையில் தீவுகளில் கரை ஒதுங்கிய சிலர் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் சீர்காழி தாலுக்கா திருமுல்லைவாசல் கிராமத்தை சேர்ந்த லெட்சுமணன் மகன் விமல்ராஜ்(28),மதியழகன் மகன் ராஜேஷ்(27), ஆகிய 2 மீனவர்களும் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 9 மீனவர்களும் கடந்த அக்டோபர் 23-ம் தேதி கொச்சி துறைமுகத்தில் இருந்து சுதர்சன் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க சென்றனர். 30 நாட்களில் கரை திரும்ப வேண்டிய மீனவர்கள் 60 நாட்கள் ஆகியும் இதுவரை கரை திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் 15 நாட்களாக கேரளாவில் தங்கி தேடி வந்தனர் ஆனால் இவர்களை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் ஒக்கி புயலில் சிக்கி படகுடன் மீனவர்கள் கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் என படகின் உரிமையாளர் கொடுத்த தகவலால் உறவினர்கள், கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

இதையடுத்து திருமுல்லை வாசல் கிராமத்தை சேர்ந்த 2 மீனவர்களின் குடும்பத்தினர்கள் மீனவர்களின் படத்தினை வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர். உறவினர்கள் மற்றும் மீனவ கிராமத்தினர் மக்கள் அமைதி ஊர்வலம் சென்று கடலில் பால் தெளித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

மீனவர்களின் உறவினர்களிடம் ரத்த மாதிரிகளை பெற்றுக்கொண்ட கேரள மருத்துவமனை நிர்வாகம் பலியான மீனவர்களின் டி.என்.ஏ பரிசோதனைக்கு பின்னர் ஏதேனும் தகவல் கிடைத்தால் கூறுவதாக உறுதியளித்துள்ளனர். 

Tags:    

Similar News