செய்திகள்

ஆம்புலன்சு தாமதத்தால் மாணவி பலி: கலெக்டரிடம் தந்தை புகார்

Published On 2017-12-20 14:04 IST   |   Update On 2017-12-20 14:04:00 IST
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் கடந்த 10.12.2017 அன்று ஆம்புலன்சு தாமதத்தால் மாணவி உயிர் இழந்த சம்பவம் குறித்து டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவியின் தந்தை கலெக்டரிடம் புகார் அளித்துள்ளார்.

காஞ்சீபுரம்:

காஞ்சீபுரத்தை அடுத்த கன்னிகாபுரத்தை சேர்ந்தவர் ஆனந்தன், நெசவுத்தொழிலாளி. இவரது மகள் சரிகா (14) 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இரண்டு சிறுநீரகமும் பாதிக்கப்பட்ட சரிகாவை சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த வாரம் சேர்த்து இருந்தனர். கடந்த 10-ந் தேதி உடல் நிலை மோசம் அடைந்தது.

இதையடுத்து சரிகாவை உடனடியாக மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்க ‘108’ ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஆம்புலன்சு வரவில்லை.

கலெக்டர் பொன்னையாவின் நடவடிக்கையை அடுத்த நீண்ட நேரத்துக்கு பின்னர் ஆம்புலன்சு வரவழைக்கப்பட்டது. ஆனால் போகும் வழியிலேயே மாணவி சரிகா பரிதாபமாக இறந்தார்.

ஆம்புலன்சு தாமதத்தால் மாணவி உயிர் இழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து சென்னை மருத்துவம் மற்றும் ஊரகநலத்துறை இயக்குநர் எம்.ஆர். இன்பசேகரன் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு செய்தார்.

ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர், பணியிலிருந்த டாக்டர்கள், செவிலியர்கள், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

இந்த நிலையில் சரிகாவின் தந்தை ஆனந்தன் காஞ்சீபுரம் கலெக்டர் பொன்னையாவிடம் மனு கொடுத்தார்.

எனது மகள் சரிகா காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தாள். கடந்த டிசம்பர் 10-ந் தேதி பகல் 12 மணி அளவில் அப்போது பணியில் இருந்த டாக்டர் மற்றும் நர்ஸ்கள் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவ மனைக்கு பரிந்துரை செய்தனர்.

ஆனால் 108 ஆம்புலன்சுக்கு போன்செய்தும் வரவில்லை. கலெக்டருக்கு தகவல் கொடுத்த பின்னர் தான் ஆம்புலன்சு வந்தது. இதனால் 7 மணி நேரம் தாமதமானது.

மகள் சரிகாவை சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது இறந்து விட்டார். 10 நிமிடம் முன்பாக வந்து இருக்கலாமே என்று அங்குள்ள டாக்டர்கள் கூறினார்கள்.

எனவே எனது மகள் இறப்பிற்கு காஞ்சீபுரம் அரசு பொது மருத்துவமனையில் கடந்த 10.12.2017 அன்று பகல் 12 மணி முதல் 7 மணிவரை அவர் அனுமதிக்கப்பட்டு இருந்த பிரிவு டாக்டர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவமனை கண்காணிப்பாளர் ஆகியோர்களின் அலட்சிய போக்கே காரணமாகும். மகள் இறப்பிற்கு காரணமான மேற்படி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Similar News