மதுராந்தகத்தில் ரூ.1¼ லட்சம் லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி அதிகாரி கைது
மதுராந்தகம்:
சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் மதுராந்தகத்தை அடுத்த அரையப்பாக்கத்தில் நிலம் வாங்கி இருந்தார்.
இதனை வீட்டு மனையாக பதிவு செய்ய அனுமதிக்க கோரி மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வினிடம் கோரிக்கை மனு அளித்து இருந்தார்.
இதற்கு ரூ. 1¼ லட்சம் லஞ்சம் தரவேண்டும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வின் கூறினார். அவருக்கு உடந்தையாக மேலாளர் மோகனும் செயல்பட்டார்.
ஆனால் லஞ்சம்கொடுக்க விரும்பாத சீனிவாசன் இதுபற்றி காஞ்சீபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் செய்தார். அதிகாரிகளின் ஆலோசனைப்படி ரசாயன பவுடர் தடவிய ரூ. 1¼ லட்சத்தை சீனிவாசனிடம் கொடுத்து அனுப்பினர்.
அதனை அவர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்த செல்வின் மற்றும் மேலாளர் மோகனிடம் கொடுத்தார்.
அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணிப்பாளர் சிவபாதகன் மற்றும் அதிகாரிகள், லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வின், மேலாளர் மோகன் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ. 1¼ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
கடந்த மாதம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் காஞ்சீபுரம் நகராட்சி கமிஷனர் சர்தாரின் காஞ்சீபுரத்தில் உள்ள வீடு மற்றும் சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
தற்போது மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலவலர், மேலாளர் ஆகியோர் லஞ்சம் வாங்கிய வழக்கில் சிக்கி உள்ளனர். காஞ்சீபுரம் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத் தில் 2-வது முறையாக லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளில் வேட்டை தொடர்ந்து உள்ளது. இதனால் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.