எம்.ஜி.ஆர்., ரஜினி வேடத்தில் கலெக்டர் அலுவலகம் வந்த கலைஞர்கள்
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நடைபெறும் கோவில் திருவிழாக்களில் நடன நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி தர வேண்டும் என்று மேடை நடன கலைஞர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நடன கலைஞர்கள் எம்.ஜி.ஆர்., ரஜினி, விஜயகாந்த் உள்ளிட்ட திரைப்பட நடிகர்கள் போல் வேடமிட்டு ஊர்வலமாக காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.
பின்னர் அவர்கள் கலெக்டர் பொன்னையாவிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறி இருப்பதாவது:-
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 800-க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் வசித்து வருகிறோம். நடன நிகழ்ச்சியை மட்டும் நம்பி வாழ்ந்து வருகிறோம்.
மாவட்டத்தில் நடைபெறும் கோயில் திருவிழாக்களில் காவல் துறையினர் நடன நிகழ்ச்சி நடத்த அனுமதி தருவதில்லை. வெளி மாநில பெண்களை அழைத்து வந்து ஆபாச நிகழ்ச்சிகள் நடத்துவதால் முறையாக நடனம் நடத்தி வரும் நாங்கள் பாதிப்பு அடைகிறோம். எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் சங்கத்தின் அடையாள அட்டை வைத்திருப்போருக்கு கோவில் திருவிழாக்களில் நடன நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினிகாந்த், விஜயகாந்த் ஆகியோரின் வேடங்களில் நடன கலைஞர்கள் மனு அளிக்க வந்ததால் பொதுமக்கள் அவர்களை வேடிக்கை பார்க்க திரண்ட னர். இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.