செய்திகள்
ஆறுகாட்டுதுறையில் படகுகளை மீனவர்கள் கரையோரத்தில் நிறுத்தி வைத்துள்ள காட்சி.

கடல் சீற்றம் - சூறை காற்று: வேதாரண்யம் மீனவர்கள் 3-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை

Published On 2017-12-19 12:00 IST   |   Update On 2017-12-19 12:00:00 IST
வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி, கோடியக்கரை உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடல் சீற்றம் காரணமாக இன்றும் 3-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை.

வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் தற்போது மீன்பிடி சீசன் காலமாகும். இதையொட்டி தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான மீனவர்கள் வேதாரண்யம் மற்றும் சுற்றுவட்டார கடலோர கிராமங்களுக்கு வந்து அங்கு தங்கியிருந்து மீன்பிடித்து வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் இந்த சீசன் காலங்களில் ஏராளமான மீன்கள் சிக்கும். அதன் மூலம் மீனவர்கள் நல்ல வருமானம் பெறுவார்கள்.

ஆனால் இந்த ஆண்டு சீசன் காலத்தில் கனமழை, ஒக்கி புயல், கடல் சீற்றம் காரணமாக பல நாட்கள் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டது. இதையும் மீறி மீன்பிடிக்க சென்றால் குறைந்த அளவே மீன்கள் கிடைக்கின்றன

மேலும் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்க மீன்வளத்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். இது மட்டுமின்றி ஆழ்கடலில் மீன்பிடிக்கும் போது இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்யும் சம்பவமும் தொடர்ந்து நடைபெற்றது. இதனால் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க அச்சம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக கடல் சீற்றம் அதிகமாக உள்ளது. மேலும் சூறைக்காற்று வீசிவருகிறது.

வேதாரண்யம், ஆறுகாட்டுத் துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி, கோடியக்கரை உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடல் சீற்றம் காரணமாக இன்றும் 3-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை. சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.

பருவ நிலை மாற்றம் ஏற்பட்டால் தான் மீண்டும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல முடியும் என்று மீனவர்கள் தெரிவித்தனர். 

Similar News