செய்திகள்
கோட்டைப்பட்டினம் கடற்கரையில் விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 12-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை

Published On 2017-12-09 09:37 IST   |   Update On 2017-12-09 09:37:00 IST
அதிகாரிகள் அனுமதி மறுப்பால் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 12-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை

அறந்தாங்கி:

கன்னியாகுமரி மாவட்ட கடலோர பகுதியில் ஒக்கி புயல் காரணமாக ஏராளமான மீனவர்கள் பலியாகினர். இன்னும் பல மீனவர்கள் கரைக்கு திரும்பவில்லை. இந்நிலையில் ஒக்கி புயல் காரணமாகவும், வங்ககடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகவும் கடந்த 28-ந்தேதி முதல் புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறையினர் அனுமதி அளிக்கவில்லை. இதனால் அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் தங்கள் படகினை கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.

தற்போது இயல்பு நிலை திரும்பி உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி கேட்டு வருகின்றனர். ஆனால் மீன்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து அனுமதி மறுத்து வருகின்றனர். இதனால் இன்று 12-வது நாளாக அவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதன் காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மீனவர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

ஒக்கி புயலின் காரணமாக புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதிகளில் எந்தவித பாதிப்பும் கிடையாது. மேலும் புயல் சின்னம், காற்றழுத்த தாழ்வுநிலை ஏற்பட்டால் வழக்கமாக 2 அல்லது 3 நாட்கள் தான் கடலுக்கு செல்ல மீன்வளத்துறையினரால் அனுமதி மறுக்கப்படும்.

ஆனால் தற்போது 8 நாட்கள் ஆகியும் கடலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு கடன் வாங்கி செலவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இப்பகுதியில் மீன்பிடி தொழில் நிறுவனங்கள், சிறு வியாபாரிகள் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் உள்ள மீன் மார்க்கெட்டுகளில் மீன்களின் விலை பலமடங்காக உயர்ந்துள்ளது.

இதனால் மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க அனுமதி வழங்க வேண்டும். மேலும் ஒக்கி புயலால் இறந்த குடும்பத்தினருக்கும், கடலுக்கு செல்லாத மீனவர்களின் குடும்பத்தினருக்கும் நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.



Similar News