செய்திகள்
பெண் போலீஸ் பாதுகாப்புடன் ஹாதியா கல்லூரிக்கு அழைத்து வரப்பட்டபோது எடுத்தபடம்.

துப்பாக்கி போலீஸ் பாதுகாப்புடன் மதம் மாறிய கேரள பெண் ஹாதியா சேலம் வந்தார்

Published On 2017-11-29 04:41 GMT   |   Update On 2017-11-29 04:41 GMT
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து துப்பாக்கி போலீஸ் பாதுகாப்புடன் கேரள பெண் ஹாதியா நேற்று இரவு சேலம் வந்தார்.
சேலம்:

கேரள மாநிலம் கோட்டயத்தை அடுத்துள்ள வைக்கம் பகுதியை சேர்ந்தவர் அசோகன். இவருடைய மகள் அகிலா. இவர் தன்னுடன் படித்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஷபின் ஜகான் என்ற வாலிபரை காதலித்தார். இதையடுத்து மதம் மாறிய அகிலா தன்னுடைய பெயரை ஹாதியா என்று மாற்றிக்கொண்டார். இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுடைய திருமணத்தை எதிர்த்து அசோகன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஹாதியாவிடம் நீதிபதிகள் கருத்தை கேட்டனர். அவர் தனது கணவருடன் செல்ல விருப்பம் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து நீதிபதிகள், ஹாதியா சேலத்தில் உள்ள ஹோமியோபதி கல்லூரியில் மீண்டும் சேர்ந்து படிப்பை தொடர வேண்டும் என்றும், அவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தனர்.

நேற்று ஹாதியா கேரளா போலீசாருடன் டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்தார். அங்கிருந்து அவர், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் போலீஸ் வாகனத்தில் சேலத்தில் உள்ள ஹோமியோபதி கல்லூரிக்கு இரவு சுமார் 7 மணிக்கு வந்தார். இதையடுத்து கேரள போலீசார் மற்றும் ஹாதியா ஆகியோர் கல்லூரி டீன் கண்ணனை சந்தித்து பேசினார்கள்.

நீண்ட நேரத்திற்கு பின்னர் ஹாதியா போலீஸ் பாதுகாப்புடன் வெளியே அழைத்து வரப்பட்டார். அப்போது ஹாதியா நிருபர்களிடம் கூறும் போது, ‘தற்போது எனக்கு போலீஸ் பாதுகாப்பு தேவைப்படுகிறது. நீண்ட நாட்களுக்கு பாதுகாப்பு தேவையில்லை. எனது கணவரை சந்திக்க போலீசாரிடம் அனுமதி கேட்டுள்ளேன்’ என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து ஹாதியா கார் மூலம் போலீஸ் பாதுகாப்புடன் சூரமங்கலத்தில் உள்ள கல்லூரிக்கு சொந்தமான விடுதிக்கு அழைத்து செல்லப்பட்டார்.
Tags:    

Similar News