செய்திகள்

சிவகங்கையில் தனியார் பள்ளியில் வருமான வரித்துறையினர் நள்ளிரவு வரை சோதனை

Published On 2017-11-22 10:16 IST   |   Update On 2017-11-22 10:16:00 IST
தனியார் பள்ளியில் வருமான வரித்துறையினர் நள்ளிரவு வரை அதிரடி சோதனை நடத்தினர். பென் டிரைவ் மற்றும் ஆவணங்களை எடுத்துச் சென்றனர்.

சிவகங்கை:

சிவகங்கை ரெயில் நிலையம் அருகே கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சாம்பவிகா உயர் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதன் தாளாளர் மற்றும் செயலாளராக இருந்து வருபவர் சேகர்.

இந்த பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். நேற்று வழக்கம் போல் பள்ளி செயல்பட்டது.

இந்த நிலையில் பகல் 12 மணியளவில் திடீரென பள்ளி வளாகத்திற்குள் மதுரை, காரைக்குடி வருமான வரித்துறை அதிகாரிகள் 5-க்கும் மேற்பட்ட கார்களில் வந்து இறங்கினர்.

அவர்கள் நேராக பள்ளியின் செயலர் அறை, பதிவறை, கணினி அறை ஆகியவற்றுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். இதனால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.

பள்ளியில் தனியாக இருந்த ஓய்வு அறையிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சோதனை தொடர்பாக பள்ளியின் நிர்வாகிகளிடமும் கேள்விகள் கேட்டு பதில்களை பதிவு செய்தனர். தொடர்ந்து அங்கிருந்த பல்வேறு ஆவணங்களை சேகரித்தனர். இந்த சோதனை நள்ளிரவு 12 மணி வரை நீடித்தது.

அதன் பிறகு 2 பைகளில் ஆவணங்கள், பென்-டிரைவ்கள் போன்றவற்றை எடுத்துக் கொண்டு அதிகாரிகள் சென்று விட்டனர்.

முன்னதாக அண்ணா மலைநகரில் உள்ள பள்ளியின் செயலர் சேகர் வீட்டிலும் வருமான வரித் துறையினர் சுமார் 2 மணி நேரம் சோதனை நடத்தினர்.

Similar News