செய்திகள்

டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு ரூ.1 லட்சம் அபராதம்

Published On 2017-10-25 10:21 IST   |   Update On 2017-10-25 10:21:00 IST
டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 2 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு நோட்டீசு வழங்கப்பட்டது.

காரைக்குடி:

சிவகங்கை மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு பணிகள் கலெக்டர் லதா உத்தரவின்பேரில் தீவிரமாக நடந்து வருகிறது. சுகாதாரத்துறை அதிகாரிகள் நாள்தோறும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.

மேலும் பொதுமக்களுக்கு டெங்கு குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவ மனைகள், நிறுவனங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் அதிகாரிகள் நேரடியாக சென்று ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

சுற்றுப்புறத்தை சுகாதார மற்ற முறையில் வைத்திருந்த பலருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் காரைக்குடி அண்ணா நகர் பகுதியில் சப்-கலெக்டர் ஆஷாஅஜித், நகராட்சி ஆணையர் சுந்தராம்பாள் மற்றும் அதிகாரிகள் இன்று காலை ஆய்வு நடத்தினர்.


அப்போது அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று ஆய்வு நடத்தியபோது அங்கு குடிநீர் தொட்டிகள் சுகாதாரமற்ற முறையில் இருந்தது தெரியவந்தது. மேலும் அதில் டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தியாகி இருந்தது. மருத்துவ கழிவுகளும் முறையாக அகற்றப்படாமல் குவிந்து கிடந்தன.


இதையடுத்து அந்த மருத்துவமனைக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 2 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு நோட்டீசு வழங்கப்பட்டது.

Similar News