செய்திகள்
ஸ்மார்ட் கார்டில் குடும்பத்தலைவர் படத்திற்கு பதிலாக பெண் படமும், கிராமத்தின் பெயர் தவறாக இருப்பதை காணலாம்

ஸ்மார்ட் கார்டில் கிராமத்தின் பெயரே மாற்றம் - பொருட்கள் வாங்க முடியாமல் 390 குடும்பத்தினர் தவிப்பு

Published On 2017-10-06 03:02 GMT   |   Update On 2017-10-06 03:02 GMT
மானாமதுரை அருகே மேலப்பசலை கிராமத்தில் 390 குடும்பத்தினரின் ஸ்மார்ட் கார்டிலும் ஊரின் பெயர் மாறி இருப்பதால் பொருட்கள் வாங்க முடியாமல் அவர்கள் தவித்து வருகின்றனர்.
மானாமதுரை:

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது மேலப்பசலை கிராமம். இங்கு சுமார் 390 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டில் கிராமத்தின் பெயர் மேலப்பசலை என்பதற்கு பதிலாக மேலபிடவூர் என மாறி இருந்தது. அதை பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் பலரது ஸ்மார்ட் கார்டில் பதிவிடப்பட்டிருந்த விபரங்கள் அனைத்தும் தவறாக இருந்தன.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அந்த கிராமத்தினர் கேட்டபோது, தவறை சரி செய்து தருவதாகவும், தற்போது பொருட்கள் வாங்கி கொள்ளுமாறும் அறிவுறுத்தி உள்ளனர்.

ஆனால் ரேஷன் கடை ஊழியர்கள் அந்த கார்டுகளுக்கு பொருட்கள் வழங்க மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதனால் அவர்கள் தவித்து வருகின்றனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்ட வழங்கல் துறை அதிகாரிகள் அந்த கிராம மக்களிடம் ஸ்மார்ட் கார்டுகளை திரும்ப பெற்றுக்கொண்டு விரைவில் அந்த கார்டுகளில் திருத்தம் செய்து தருவதாக தெரிவித்துள்ளனர்.

ஒட்டு மொத்த ஸ்மார்ட் கார்டிலும் கிராமத்தின் பெயரே மாறி உள்ள சம்பவம் கிராம மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
Tags:    

Similar News