இளையான்குடி அருகே டெங்கு காய்ச்சலுக்கு வாலிபர் பலி
சிவகங்கை:
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி உள்ளது. இதனால் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் டெங்கு பாதிப்புக்கு உள்ளானவர்கள் சிகிச்சைக்காக நீண்ட வரிசையில் நிற்கின்றனர்.
டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்ட போதிலும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டடவர்களின் எண்ணிக்கை குறையவில்லை.மேலும் இந்த காய்ச்சல் பல இடங்களில் உயிர்ப்பலியும் வாங்கி உள்ளது.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே கீழாயூர் காலனி பகுதியைச் சேர்ந்த அழகர்சாமி (வயது 35) என்பவரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக இறந்தார்.
சேலத்தில் வேலை பார்த்து வந்த இவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் பலனளிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அழகர்சாமி சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்திலும் டெங்குவின் தாக்கம் அதிகமாக உள்ளது. இங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 24 மணி நேர சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறவந்தவர்களில் 4 சிறுவர்கள் உள்பட 7 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்டத்திலும் டெங்குவின் தாக்கம் அதிகமாக உள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளானவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.