செய்திகள்

காரைக்குடியில் தே.மு.தி.க. பொதுக்குழு கூடியது - விஜயகாந்த் பங்கேற்பு

Published On 2017-09-30 11:28 IST   |   Update On 2017-09-30 11:28:00 IST
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தே.மு.தி.க.வின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. கட்சி நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனை நடத்தி வருகிறார்.
காரைக்குடி:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சூடாமணிபுரத்தில் உள்ள பி.எல்.பி. பேலஸ் மகாலில் இன்று தே.மு.தி.க. மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் காலை 9 மணிக்கு தொடங்கியது.

கட்சி தலைவர் விஜயகாந்த் தலைமை தாங்கினார். அவரது மனைவி பிரேமலதா, இளைஞரணி செயலாளர் சுதீஷ், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி, பொருளாளர் இளங் கோவன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள், பொதுக் குழு உறுப்பினர்கள் என 2500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக தே.மு.தி.க. கட்சி கொடியை விஜயகாந்த் ஏற்றினார். தொடர்ந்து நடந்த பொதுக்குழுவில் முக்கிய நிர்வாகிகள் பேசினர். அதனை தொடர்ந்து இறுதியாக விஜயகாந்த் பேசுகிறார்.

அப்போது பிரேமலதாவுக்கு கட்சியில் முக்கிய பதவி வழங்குவது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்படுகின்றன.

பொதுக்குழுவுக்கு அழைப்பு கடிதம் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். கடுமையான கெடுபிடிகள் இருந்ததால் தொண்டர்கள் பொதுக்குழுவுக்கு செல்ல முடியவில்லை.


தே.மு.தி.க. பொதுக்குழு நடைபெறும் மகால்

பொதுக்குழுவையொட்டி காரைக்குடி நகர் முழுவதும் கட்சி நிர்வாகிகள் விஜயகாந்தை வரவேற்று பிளக்ஸ் போர்டுகள் வைத்துள்ளனர்.

காரைக்குடி நகர் தே.மு.தி.க. தொண்டர்களால் நிரம்பி வழிந்தது. கட்சியின் முக்கிய நிர்வாகிகள் 200-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்திருந்தனர்.



Similar News