செய்திகள்

காஞ்சீபுரத்தில் அரசு பள்ளியில் தீவிபத்து: புத்தகபை - சீருடை எரிந்து நாசம்

Published On 2017-08-18 09:54 GMT   |   Update On 2017-08-18 09:54 GMT
காஞ்சீபுரத்தில் அரசு பள்ளியில் தீவிபத்து ஏற்பட்டதில் அறையில் வைக்கப்பட்டு இருந்த 9 ஆயிரம் புத்தகபைகள், 3 ஆயிரம் இலவச காலணிகள் மற்றும் இலவச சீருடைகள் முற்றிலும் எரிந்து சாம்பலாயின.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் வைகுண்டபுரம் தெருவில் டாக்டர் பி.எஸ்.சீனிவாசன் நகராட்சி மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

பள்ளி வளாகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகமும் ராணி அண்ணாதுரை மகளிர் பள்ளியும் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் இன்று அதிகாலை பள்ளி வளாகத்தில் உள்ள அறையில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனை கண்ட பொதுமக்கள் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

காஞ்சீபுரம் கோட்ட தீயணைப்பு அலுவலர் மனோகரன், நிலைய அலுவலர் நடராஜன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

நீண்ட நேர போராட்டத்துக்கு பின்னர் முற்றிலும் அணைக்கப்பட்டது. எனினும் அறையில் வைக்கப்பட்டு இருந்த 9 ஆயிரம் புத்தகபைகள், 3 ஆயிரம் இலவச காலணிகள் மற்றும் இலவச சீருடைகள் முற்றிலும் எரிந்து சாம்பலாயின.

மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதா? அல்லது நாசவேலை காரணமா என்று விஷ்ணு காஞ்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பள்ளி திறக்கப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகியும் மாணவ-மாணவிகளுக்கு வழங்க வேண்டிய இலவச பைகள், சீருடைகள், காலணிகள் போன்றவை ஏன் வழங்கப்படாமல் அறையில் வைத்து பூட்டப்பட்டது என்று அப்பகுதி மக்களும் மாணவ-மாணவியர்களின் பெற்றோர்களும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Tags:    

Similar News