செய்திகள்

நித்யானந்தா சீடர்கள் கடத்திச்சென்றதாக புகார்: ஆதீன மடாதிபதி காஞ்சீபுரம் திரும்பினார்

Published On 2017-08-02 09:13 IST   |   Update On 2017-08-02 09:13:00 IST
நித்யானந்தா சீடர்கள் கடத்திச் சென்றதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருந்த நிலையில், தொண்டை மண்டல ஆதீன மடாதிபதி பெங்களூருவில் இருந்து திடீரென காஞ்சீபுரம் திரும்பினார்.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரத்தில் பழமை வாய்ந்த தொண்டை மண்டல ஞானபிரகாச மடத்தின் 232-வது மடாதிபதியாக ஞானபிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஆதீனமாக பொறுப்பேற்று 18 வருடங்கள் ஆகிறது. இந்த மடத்திற்கு பல ஆயிரம் கோடிக்கு மேல் சொத்துகள் உள்ளன.

கடந்த சில மாதங்களாக ஞானபிரகாச மடத்தில் பெங்களூருவை சேர்ந்த பிடதி ஆசிரம நித்யானந்தாவின் சீடர்கள் சிலர் வந்து தங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள், அங்கு சிவலிங்க பூஜையை மாற்றி, நித்யானந்தா பூஜையை செய்து வருவதாகவும், மடத்தின் சொத்துகளையும், நிர்வாகத்தையும் கைப்பற்ற முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து அறிந்த தொண்டை மண்டல முதலியார்கள் சங்க அமைப்பினர் மடாதிபதியிடம் சென்று கேட்டதற்கு, இதுகுறித்து பேச கடந்த 30-ந் தேதி மாலை வருமாறு அவர் அழைப்பு விடுத்திருந்தார். இதற்காக முதலியார் அமைப்பினர் சென்றபோது, மடத்தின் கதவு பூட்டப்பட்டு இருந்தது. மடாதிபதியும், நித்யானந்தாவின் சீடர்களும் அங்கு இல்லை. இதனால் சந்தேகமடைந்த அவர்கள், மடாதிபதி ஞானப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகளை, நித்யானந்தா சீடர்கள் கடத்தி இருக்கலாம் என்றும், அவரை மீட்டு தர வேண்டும் எனவும் பெரிய காஞ்சீபுரம் போலீசில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சரவணன், அந்த மடத்தில் தங்கி இருந்த நித்யானந்தா சீடர்களிடம் விசாரணை நடத்தினார். மடாதிபதியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, என்னை யாரும் கடத்தவில்லை, சமய சொற்பொழிவு ஆற்றவே பெங்களூரு பிடதி மடத்திற்கு வந்துள்ளதாக தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து காஞ்சீபுரம் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமணி தலைமையில் அதிகாரிகள் மடத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்தநிலையில் ஞானபிரகாச தேசிக பரமாச்சாரியா சுவாமிகள் நேற்று மாலை திடீரென பெங்களூருவில் இருந்து பெரிய காஞ்சீபுரம் தொண்டை மண்டல ஆதீன மடத்திற்கு திரும்பினார்.

இதற்கிடையே, தொண்டைமண்டல முதலியார் அமைப்புகள் வரும் 4-ந்தேதி காந்திரோடு பெரியார் தூண் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தவும், 7-ந்தேதி காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே உண்ணாவிரதம் இருக்கவும் பெரிய காஞ்சீபுரம் போலீஸ் நிலையத்தில் அனுமதி கேட்டு மனு அளித்தனர்.

Similar News