குத்தாலம் அருகே குட்டையில் மூழ்கி 2 மாணவர்கள் பலி: கிராம மக்கள் சோகம்
குத்தாலம்:
நாகை மாவட்டம் குத்தாலம் தாலுகா பெரம்பூர் காவல் சரகம் தென்குடி கிராமம் நடுத் தெருவை சேர்ந்த கண்ணன் மகன் கிருஷணகுமார் (வயது 10), நாகராஜன் மகன் சஞ்சய்(10). இவர்கள் அதே பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தனர்.
இந்ந நிலையில் நேற்று மாலை கிருஷ்ணகுமாரும், சஞ்சயும் அங்குள்ள தாமரைகுட்டை அருகில் விளையாடினர். அப்போது குட்டையில் தவறி விழுந்த 2 பேரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். விளையாட சென்ற சிறுவர்கள் 2 பேரும் நீண்ட நேரமாக வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவர்களின் பெற்றோர் தேடினர். அப்போது அவர்கள் குட்டையில் மூழ்கி இறந்து பிணமாக மிதப்பது தெரியவந்தது. அவர்கள் உடலை மீட்டு வீட்டுக்கு கொண்டு சென்றனர்.
ஒரே நேரத்தில் 2 சிறுவர்கள் குட்டையில் மூழ்கி இறந்தது தென்குடி கிராம மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த பரிதாப சம்பவம் சுற்று வட்டார பகுதி மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.