செய்திகள்

காஞ்சீபுரம் ஆதீன மடத்தின் ரூ.2000 கோடி சொத்துக்களை அபகரிக்க நித்யானந்தா சீடர்கள் திட்டம்?

Published On 2017-07-31 15:11 IST   |   Update On 2017-07-31 15:11:00 IST
காஞ்சீபுரம் ஆதீன மடத்தின் ரூ.2000 கோடி சொத்துக்களை அபகரிக்க நித்யானந்தா சீடர்களால் மடாதிபதி கடத்தப்பட்டிருக்கலாம் என்று தொண்டை மண்டல முதலியார்கள் சங்க நிர்வாகிகள் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம், பரமசிவன் தெருவில் பழமை வாய்ந்த தொண்டைமண்டல ஆதீனம் ஞானபிரகாச மடம் உள்ளது.

இந்த மடத்தின் 232-வது பட்டம் மடாதிபதியாக ஞானப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளார். இவர் கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஆதீனமாக பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார்.

மடத்துக்கு சென்னை, காஞ்சீபுரம், திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சுமார் ரூ.2000 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன.

இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பெங்களூரை சேர்ந்த நித்யானந்தா சீடர்களான ஒரு ஆணும், பெண்ணும் மடத்துக்குள் வந்தனர். அவர்கள் மடாதிபதிக்கு பணிவிடையும், சேவையும் செய்வதாக கூறி இருந்தனர்.

இதற்கிடையே மடத்தில் உள்ள மரகதத்திலான சிவலிங்கத்துக்கு பாரம்பரிய பூஜை முறைகளை நித்யானந்தா சீடர்கள் மாற்றி அமைத்ததாக தெரிகிறது. மேலும் நித்யானந்தா பெயரைச் சொல்லி பூஜை நடப்பதாக கூறப்படுகிறது. இதே போல மடத்துக்கு வரும் பக்தர்களுக்கு நித்யானந்த சீடர்கள் ஆசி வழங்கியும் வந்தனர்.

இது குறித்து அறிந்த தொண்டை மண்டல முதலியார்கள் சங்க அமைப்பினர் மடாதிபதியிடம் கேட்டனர். இது பற்றி பேசுவதற்காக வரும்படி அவர் கூறி இருக்கிறார்.

நேற்று மாலை முதலியார் சமூகத்தினர் சென்ற போது மடத்தின் கதவு பூட்டப்பட்டு இருந்தது. மடாதிபதியும், நித்யானந்த சீடர்களும் மாயமாகி இருந்தனர்.

இதனால் சந்தேகம் அடைந்த தொண்டை மண்டல முதலியார்கள் அமைப்பினர் பெரிய காஞ்சீபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

அதில் மடாதிபதி ஞானப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமி, நித்யானந்த சீடர்களால் கடத்தப்பட்டு இருக்கலாம் என்று கூறி இருந்தனர்.

மாயமான மடாதிபதி எங்கே இருக்கிறார் என்பது மர்மமாக உள்ளது. அவர் பயன்படுத்தி வந்த செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருக்கிறது. மடத்திலிருந்த நித்யானந்தா சீடர்கள் பற்றிய விவரங்களும் போலீசாருக்கு தெரியவில்லை.

இதனால் மடாதிபதியை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் இது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து தொண்டை மண்டல முதலியார்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

பாரம்பரியமான மடத்தை விட்டு நித்யானந்தா சீடர்கள் விரைவில் வெளியேற்றப்படுவார்கள். மடத்திற்கு சொந்தமான ரூ.2000 கோடி சொத்துக்களை நித்யானந்தா சீடர்கள் அபகரிக்க முயற்சி செய்கிறார்கள். மாயமான மடாதிபதியை மீட்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் காஞ்சீபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

Similar News