செய்திகள்
தந்தையின் உடலுக்கு பேராசிரியர் ஜெயராமன் அஞ்சலி செலுத்திய காட்சி

கதிராமங்கலத்தில் மீண்டும் அறவழியில் போராட்டம்: பேராசிரியர் ஜெயராமன் பேட்டி

Published On 2017-07-24 10:40 IST   |   Update On 2017-07-24 10:40:00 IST
கதிராமங்கலத்தில் அறவழியில் மீண்டும் போராட்டம் தொடரும், பொதுமக்கள் நீதித்துறையை நம்புகின்றனர் என பேராசிரியர் ஜெயராமன் கூறினார்.
மயிலாடுதுறை:

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கச்சா எண்ணெய் எடுத்து வருவதை கண்டித்து கடந்த 30-ந் தேதி பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள்.

இது தொடர்பாக மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் பேராசிரியர் ஜெயராமன் தந்தை தங்கவேல் இறந்து விட்டார். அவரது இறுதி சடங்கில் பங்கேற்க இடைக்கால ஜாமீன் கோரி ஜெயராமன் சார்பில் இடைக்கால மனு மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்யப்பட்டது.

அவருக்கு 3 நாட்கள் இடைக்கால ஜாமீன் வாங்கி நீதிபதி நிஷாபானு உத்தரவிட்டார். இதையடுத்து திருச்சி மத்திய சிறையில் இருந்து நேற்று மாலை ஜெயராமன் வெளியே வந்தார்.

பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் மயிலாடுதுறை வந்தார். அங்கு தனது தந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கதிராமங்கலம் போராட்டத்தில் 23 பேர் கைது செய்யப்பட்டோம். இதில் 10 பேர் மீது 12 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தாசில்தாரை கொலை செய்து விடுவேன் என்று கூறியதாக மற்றும் பல்வேறு காரணங்களை கூறி பொய்யான வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மக்கள் எந்தவித கலவரத்தையும் தூண்டவில்லை. காவல் துறை தான் கலவரத்தை உருவாக்கியது. அறவழியில் போராட்டம் நடத்தி வருகிறோம்.

நாகை, திருவாரூர் உள்பட 21 இடத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு மையம் அமைக்க போவதாக தகவல் வந்துள்ளது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

மத்திய அரசு காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். பொதுமக்கள் நீதித்துறையை நம்புகின்றனர். மீண்டும் அறவழியில் போராட்டம் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜெயராமன் தந்தையில் இறுதி சடங்கி இன்று காலை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Similar News