செய்திகள்

செங்கல்பட்டு அருகே 5 அரசு பஸ்கள் கண்ணாடி உடைப்பு

Published On 2017-05-16 13:56 IST   |   Update On 2017-05-16 13:56:00 IST
செங்கல்பட்டு அருகே 5 அரசு பஸ்கள் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதில் பயணிகள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனால் பயணிகள் மாற்று பஸ்சில் செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.
செங்கல்பட்டு:

பஸ் ஊழியர்கள் போராட்டம் காரணமாக செங்கல்பட்டு பகுதியில் குறைந்த அளவு பஸ்களே இயக்கப்பட்டன.

செங்கல்பட்டு பணிமனையில் மொத்தம் உள்ள 125 பஸ்களில் 18 பஸ்கள் மட்டுமே ஓடியது. கிராமங்களுக்கு 2-வது நாளாக பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

செங்கல்பட்டை அடுத்த இருகுன்றப்பள்ளி அருகே நேற்று இரவு சென்னையில் இருந்து நெய்வேலி நோக்கி சென்ற அரசு பஸ் மீது மர்ம கும்பல் கல்வீசினர். இதில் பஸ்சின் கண்ணாடி நொறுங்கியது.

இதேபோல் திம்மராஜ குளம் அருகே பாண்டிச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பஸ் மீதும், கூடுவாஞ்சேரி அருகேயும், ஊரப்பாக்கம் அருகேயும், வண்டலூரை அடுத்த இரணியம்மன் கோவில் அருகேயும் அரசு பஸ் மீது கல்வீசப்பட்டது.

இதில் பஸ்களின் கண்ணாடிகள் நொறுங்கின. பயணிகள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

காஞ்சீபுரம் போக்குவரத்து மண்டல மேலாளர் ரகு நாதன் கூறும்போது, ‘பஸ் ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

தனியார் பஸ்கள், தனியார் நிறுவன பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக தற்காலிக டிரைவர்கள், கண்டக்டர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்’ என்றார்.

பெரியபாளையத்தை அடுத்த எர்ணாகுப்பம் அருகே இன்று காலை ஆரணியில் இருந்து ஆவடி நோக்கி மாநகர பஸ் சென்றது. அப்போது மர்ம கும்பல் பஸ் மீது கல்வீசி தாக்கினர். இதில் பஸ்சின் கண்ணாடி உடைந்தது. டிரைவர் அருள் படுகாயம் அடைந்தார். இதனால் பயணிகள் மாற்று பஸ்சில் செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.

Similar News