செய்திகள்

காஞ்சீபுரம்-திருவள்ளூரில் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன

Published On 2017-05-16 13:32 IST   |   Update On 2017-05-16 13:32:00 IST
காஞ்சீபுரம், திருவள்ளூரை சுற்றி நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு அதிக அளவிலான தனியார் பஸ்களே இயக்கப்பட்டன.
காஞ்சீபுரம்:

போக்குவரத்து ஊழியர்கள் ‘ஸ்டிரைக்’ காரணமாக காஞ்சீபுரம் - திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 2-வது நாளாக குறைந்த அளவு பஸ்கள் இயக்கப்பட்டன.

காஞ்சீபுரம் பணிமனையில் மொத்தம் 74 பஸ்கள் உள்ளன. இதில் இன்று காலை 41 பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டது.

காஞ்சீபுரம் நகரைச் சுற்றி நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு அதிக அளவிலான தனியார் பஸ்களே இயக்கப்பட்டன.

தற்போது தாம்பரம், செங்கல்பட்டு, மதுராந்தகம், திருத்தணி, பூந்தமல்லி ஆகிய இடங்களுக்கு அதிக அளவில் பயணிகள் செல்வதால் கிராமப்புறங்களுக்கு சென்று கொண்டிருந்த தனியார் பேருந்துகள் அனைத்தும் நகர் பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டன.

இதனால் கிராமங்களுக்கு செல்ல வேண்டிய மக்கள் அவதிக்குள்ளாகினர். அதிக அளவில் அரசு பஸ்களை இயக்க வேண்டிய நிலை உள்ளதால் தினக்கூலி அடிப்படையில் தற்காலிக டிரைவர்களை நியமிக்கும் தேர்வு காஞ்சீபுரம் பணி மனையில் நடந்து வருகிறது.

காஞ்சீபுரம் நகர் பகுதியில் நேற்று அதிக அளவு தனியார் பள்ளி, கல்லூரி பஸ்கள் ஓடின. இன்று அந்த பஸ்கள் நிறுத்தப்பட்டு உள்ளது.

இது குறித்து போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறும்போது, அரசு பஸ்கள் ஓரளவு ஓட ஆரம்பித்து இருப்பதால் தனியார் பள்ளி, கல்லூரி பஸ்கள் நிறுத்தப்பட்டு உள்ளன.

பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பை பொறுத்து மீண்டும் அந்த பஸ்களை இயக்க தயார் நிலையில் உள்ளன என்றார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள போக்குவரத்துக் கழக பணிமனைகளில் திருவள்ளூரில்-58, திருத்தணியில்-71, ஊத்துக்கோட்டையில்-40, பொன்னேரியில்-50, பொதட்டுர்பேட்டையில்-13, ஆர். கே.பேட்டையில்-20 என மொத்தம் 252 பஸ்கள் உள்ளன.

இதில் திருவள்ளூரில்-22, ஊத்துக்கோட்டையில்-8, திருத்தணியில்-15, ஆர். கே.பேட்டையில்-13, பொதட்டுர்பேட்டையில் ஓடவில்லை, பொன்னேரி யில் 26 பஸ்களும் மொத்தம் 84 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன.

தனியார் பஸ்கள் மற்றும் ஆட்டோக்கள் வழக்கத்தைவிட கூடுதலாக இயங்கியதால் பயணியர் அதிகளவில் பாதிக்கப்படவில்லை. இருப்பினும் அரசு பஸ்சில் புதிய டிரைவர்களை கொண்டு இயக்குவதால் பயணம் செய்ய பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
 
திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிக்கு இயங்கும் தனியார் பஸ்கள் சென்னைக்கு திருப்பி விடப்பட்டு உள்ளது. இதனால் கிராமப் பகுதிகளில் இருந்து திருவள்ளூருக்கு வரும் மக்கள் கடும் சிரமப்பட்டனர்.

பல மணி நேரம் காத்திருந்து வேன், ஷேர் ஆட்டோக்களில் சென்றனர். அவர்கள் வழக்கத்தைவிட அதிகமாக கட்டணத்தை வசூலித்தனர்.

திருவள்ளூர் பணிமனையில் தற்காலிக டிரைவர்கள், கண்டக்டர்கள் தேர்வு செய்யும் பணி இன்று நடந்தது. டிரைவர்களை பஸ்சை ஓட்டச் செய்து அவர்களது திறனை போக்குவரத்து துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதன் பின்னரே அவர்கள் அரசு பஸ்களை இயக்க அனுமதிக்கப்பட்டனர்.

Similar News