செய்திகள்
கொலையுண்ட சர்மிளா தனது காதல் கணவர் கலைராஜூவுடன் எடுத்துக்கொண்ட படம்.

அரியலூர் அருகே கர்ப்பிணி மகளை கவுரவ கொலை செய்த பெற்றோர்

Published On 2017-04-18 05:08 GMT   |   Update On 2017-04-18 05:08 GMT
அரியலூர் அருகே கணவரை கைவிட்டு காதலனுடன் வாழ்ந்ததால் ஆந்திரமடைந்த பெற்றோர் கர்ப்பிணி என்றும் பாராமல் மகளை கவுரவ கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செந்துறை:

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி காலனி தெருவைச்சேர்ந்தவர் தங்கராசு- பவானி தம்பதியின் மகள் சர்மிளா (25). இவரும், அதே பகுதியை சேர்ந்த கலைராஜ் (30) என்பவரும் காதலித்து வந்தனர். இதனை சர்மிளாவின் பெற்றோர் எதிர்த்தனர்.

கடந்த 2008-ம் ஆண்டு பெற்றோர் எதிர்ப்பை மீறி, சர்மிளா வீட்டை விட்டு வெளியேறி அரியலூர் போலீஸ் நிலையத்தில் தனது காதலனுடன் தஞ்சம் அடைந்தார். அப்போது இருவீட்டு பெற்றோரையும் போலீசார் அழைத்து சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர்.

மீண்டும் காதலனுடன் தலைமறைவான சர்மிளாவை அவரது பெற்றோர் அழைத்து வந்து செந்துறை அருகே உள்ள இலைக்கடம் பூர் கிராமத்தை சேர்ந்த அன்புமணி என்பவருக்கு 2009-ம் ஆண்டு திருமணம் செய்து வைத்தனர். அவர்களுக்கு ஹாசினி என்ற குழந்தை உள்ளது.

இதற்கிடையே சென்னைக்கு வேலைக்கு செல்வதாக கூறிச்சென்ற சர்மிளா அங்கு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் தனது பழைய காதலன் கலைராஜூடன் சேர்ந்து குடும்பம் நடத்தி வந்தார். இதில் சர்மிளா கர்ப்பமும் அடைந்தார்.

குடும்ப வாழ்க்கைக்கு ஆதாரமாக சர்மிளாவை கடந்த மாதம் (மார்ச்) 16-ந்தேதி சென்னை திருவேற்காட்டில் உள்ள ஒரு கோவிலில் கலைராஜூடன் திருமணமும் செய்து கொண்டார். அதன் பிறகு சென்னையில் இருந்தே கர்ப்பகால சிகிச்சை முறைகளை சர்மிளா மேற்கொண்டு வந்தார்.

இந்தநிலையில் தனது மகள் ஹாசினியை பார்ப்பதற்காக சர்மிளா, தனது காதல் கணவர் கலைராஜூடன் கடந்த 12-ந்தேதி செந்துறைக்கு புறப்பட்டு வந்தார். இதையறிந்த சர்மிளாவின் பெற்றோர் தனது மகளை பார்த்து பேசினர். குடும்ப கவுரவத்திற்கு இழுக்காக இருப்பதை தவிர்க்கும் வகையில் காதலனை கைவிட்டு கணவர் அன்புமணியுடன் குடும்பம் நடத்துமாறு கூறினர்.

மேலும் பெரம்பலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சர்மிளாவை அழைத்து சென்று கர்ப்பத்தை கலைக்குமாறும் வற்புறுத்தினர். அப்போது அங்கு வந்த கலைராஜூவை துரத்தி விட்டு சர்மிளாவை அவரது பெற்றோர் உறவினர் ஒருவரின் வீட்டுக்கு அழைத்து சென்றனர். அங்கு ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சர்மிளாவின் பெற்றோர் மகள் என்றும் பாராமல் கர்ப்பிணியை தாக்கினர்.

கொலையுண்ட சர்மிளா பிணமாக கிடக்கும் காட்சி.

இதில் மூக்கில் இருந்து ரத்தம் வந்த நிலையில் சர்மிளா பரிதாபமாக இறந்தார். இதனை மறைக்க மன உளைச்சலில் இருந்த சர்மிளா தற்கொலை செய்து கொண்டதாக அக்கம் பக்கத்தினரிடம் பெற்றோர் நாடகமும் ஆடியுள்ளனர். பின்னர் அவரது உடல் சொந்த ஊரான பொன்பரப்பிக்கு கொண்டு வரப்பட்டது.

இதுகுறித்த தகவல் அறிந்த செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாநிதி மற்றும் போலீசார் சர்மிளாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே காதல் கணவர் கலைராஜூவும் செந்துறை போலீசில் சர்மிளாவை அவரது பெற்றோர் அடித்து கொன்று விட்டதாக புகார் அளித்தார்.

அதன்பேரில் நடந்த விசாரணையில் குடும்ப கவுரவத்திற்கு இழுக்கு ஏற்படும் வகையில் தங்கள் மகள் நடந்து கொண்டதால் அவரை கவுரவ கொலை செய்து விட்டதாக பெற்றோர் ஒப்புக் கொண்டனர். அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர்.

Similar News