செய்திகள்

முதல்வராக சசிகலா தேர்வு: திருமாவளவன் வரவேற்பு - கருத்து கூற விரும்பாத வைகோ

Published On 2017-02-06 10:39 IST   |   Update On 2017-02-06 10:39:00 IST
தமிழக முதலமைச்சராக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா தேர்வு செய்யப்பட்டதற்கு திருமாவளவன் வரவேற்றுள்ளார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கருத்து கூற விரும்பவில்லை.
அரியலூர்:

அரியலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே சிறுமி நந்தினி கொலை செய்யப்பட்டதற்கு போலீசாரின் அலட்சியமே காரணம் ஆகும். மேலும் சிறுமி காணாமல் போன நிலையில் பெற்றோர் புகார் அளித்த போது போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தால் சிறுமி கொலை செய்யப்பட்டிருப்பதை தடுத்திருக்கலாம். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

சிறுமியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் ஆதிதிராவிட மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அ.தி.மு.க. சார்பில் யாரை சட்டமன்ற தலைவராகவும், முதல்-அமைச்சராகவும் தேர்வு செய்வது என்பது அக்கட்சியின் உட்கட்சி விவகாரம் ஆகும். இதில் நான் கருத்து கூற ஒன்றுமில்லை.

ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வை சேர்ந்த ஒட்டு மொத்த சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கிடையே கருத்து வேறுபாடு இல்லாத நிலையில் ஒருமித்த கருத்து எடுத்திருப்பதை வரவேற்க நான் கடமைப்பட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் சென்னை செல்வதற்காக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ திருச்சி விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

“தமிழகத்திற்கு தற்போது உள்ள மிகப்பெரிய ஆபத்து சீமைக்கருவேல மரங்கள் தான். இவை எதிர்காலத்தில் வளங்களை குறைக்கக்கூடியது. ஜல்லிக்கட்டுக்கு மாணவர்கள் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றதுபோல், அந்தந்த ஊரில் மாணவர்கள், பொதுமக்கள், விவசாயிகளுடன் இணைந்து சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கு முன்வர வேண்டும் என்றார்.

பின்னர் நிருபர்கள், சசிகலா முதல்-அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து கருத்து கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், இது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எடுக்கின்ற முடிவு. ஓ.பன்னீர்செல்வத்தை எம்.எல்.ஏ.க்கள் முதல்-அமைச்சராக தேர்ந்தெடுத்தபோது நான் எந்த கருத்தும் கூறவில்லை. இன்றும் நான் கருத்து சொல்ல விரும்பவில்லை.

இவ்வாறு வைகோ கூறினார்.

Similar News