செய்திகள்

புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு காளை இறந்தது

Published On 2017-02-03 09:26 IST   |   Update On 2017-02-03 09:26:00 IST
புதுக்கோட்டை அருகே ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டிகளில் கலந்து கொண்ட ஜல்லிக்கட்டு காளை இறந்தது.
விராலிமலை:

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல்அருகே உள்ள மெய்வழிச்சாலையை சேர்ந்தவர் சாலை கனகராஜ். ஜல்லிக்கட்டு ஆர்வலரான இவர் ஜல்லிக்கட்டு காளை களை வளர்த்து வருகிறார். மாவட்டத்தில் எங்கு ஜல்லிக் கட்டு நடந்தாலும் அவரின் காளை பங்குபெறாமல் இருக்காது. அப்படி பங்கு பெற்றாலும் இவர் காளையை யாரும் தொட முடியாது என்ற அளவுக்கு பயிற்சி அளித்தார்.

இவரது காளைகள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று டி.வி., பிரிட்ஜ், வாசிங்மிஷின், கட்டில், பீரோ, சைக்கிள், குடம் போன்ற பல பரிசுகளை வென்றுள்ளது.

இதில் அறிவு என்ற பெயர் சூட்டப்பட்ட சுமார் 20 வயதான ஜல்லிக்கட்டு காளை கடந்த இரண்டு மாத காலமாக உடல் நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இதற்காக மாட்டின் உரிமையாளர் நாமக்கல்லில் இருந்து கால் நடை மருத்துவரை வரவழைத்து குளுகோஸ், மருந்து மாத்திரைகள் கொடுத்து அதற்கு மருத்துவம் பார்த்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று வழக்கம் போல் காளைக்கு தீனி போட செல்லும் பொழுது காளை மயங்கிய நிலையில் இருந்துள்ளது. இதனை அடுத்து சிறிது நேரத்தில் அதே நிலையிலேயே உயிர் இழந்தது.

அறிவு காளைமாடு இறந்த தகவல் சுற்று வட்டார பகுதிகளில் பரவியது. இதை அறிந்து சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பொதுமக்களும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் மாலை, வேஷ்டி துண்டுகளுடன் வந்து காளைக்கு அஞ்சலி செலுத்தி வணங்கி சென்றனர்.

இறந்த காளை மாட்டிற்கு மனிதர்களுக்கு செய்யப்படுவதுபோல் சடங்குகள் செய்யப்பட்டு ஊர்வலமாக வீட்டில் இருந்து எடுத்து செல்லப்பட்டு மாட்டின் உரிமையாளர் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இது குறித்து மாட்டின் உரிமையாளர் கூறுகையில், இந்த மாட்டிற்கு 20 வயது ஆகிறது, இந்த காளைக்கு அறிவு என்ற பெயர் வைத்து அழைத்தோம். இதை எங்கள் வீட்டில் ஒருவர் போல் வளர்த்து வந்தோம், இந்த காளை இதுவரை 1000-க்கும் மேற்பட்ட ஜல்லிகட்டில் கலந்துகொண்டுள்ளது.

இதை இதுவரை யாரும் அடக்கியது இல்லை எனவும், இந்த காளை பல பரிசுகளை பெற்றுள்ளது எனவும் இந்த இழப்பை எங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றும் அவர் கண்ணீருடன் கூறினார்.

இரண்டு ஆண்டுகளாக தடைபட்டிருந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு தற்போது அனுமதி கிடைத்திருக்கும் நேரத்தில் ஜல்லிக்கட்டு காளை இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Similar News