செய்திகள்

புதுக்கோட்டை அருகே தடையை மீறி நடந்த ஜல்லிக்கட்டு போட்டி

Published On 2017-01-02 11:31 IST   |   Update On 2017-01-02 11:31:00 IST
புதுக்கோட்டை அருகே தடையை மீறி நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டில் இளைஞர்கள் காளைகளை அடக்கினர்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் ஆவூர் அருகே உள்ளது மலம்பட்டி கிராமம். இக்கிராமத்தில் புனித சவேரியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆங்கிலப்புத்தாண்டை சிறப்பாக கொண்டாடுவது வழக்கம்.

அதேபோல இந்தாண்டும் புத்தாண்டு கொண்டாட்டமானது நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் தொடங்கியது. அன்று நள்ளிரவு 12 மணிக்கு ஆங்கில புத்தாண்டு பிறந்ததையொட்டி சிறப்பு திருப்பலி நடைபெற்றது

இதில் மலம்பட்டி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து சவேரியார் ஆலயத்தில் நேற்று காலை ஊர்மக்கள் கலந்து கொண்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.

இதேபோல் புத்தாண்டையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். ஆனால் ஐகோர்ட்டு தடை உத்தரவால் கடந்த ஆண்டு இங்கு ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. ஆனால் நேற்று ஐகோர்ட்டு தடையையும் மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது.

இதில் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 30-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டுக்காளைகள் கொண்டு வரப்பட்டன. அந்த காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டது. காளைகள் மைதானத்தில் சீறிப்பாய்ந்து சென்ற போது இளைஞர்கள் காளைகளை போட்டி போட்டு அடக்கினர்.

திடீரென்று நடத்தப்பட்ட இந்த ஜல்லிக்கட்டு போட்டி அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News