செய்திகள்
வெள்ளையம்மாள் - ஆறுமுகம்

பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து: பெண் உள்பட 2 பேர் பலி

Published On 2017-01-02 09:14 IST   |   Update On 2017-01-02 09:14:00 IST
அரிமளம் அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பெண் உள்பட 2 பேர் இறந்தனர்.
அரிமளம்:

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம் கீழாநிலைக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். இவர் அப்பகுதியில் பட்டாசு தொழிற்சாலை நடத்தி வருகிறார். தொழிற்சாலையில் உள்ள ஒரு அறையில் வெடிபொருட்கள் தயாரிக்க பயன்படும் மருந்து பொருட்களையும், மற்றொரு அறையை தயாரிக்கப்பட்ட வெடிகளை சேமித்து வைக்கும் கிடங்காகவும் பயன்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் நேற்று கீழாநிலைக்கோட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்த ஆறுமுகம் (வயது 45), வெள்ளையம்மாள் (32) ஆகிய தொழிலாளிகள் வெடிமருந்து கிடங்கில் இருந்து வெடிமருந்து நிரப்பிய பெட்டியை தூக்கிக்கொண்டு வெடி தயாரிக்கும் இடத்திற்கு வந்தனர். அப்போது பெட்டி கை தவறி கீழே விழுந்து வெடித்து சிதறியது. இதனால் வெடி வைத்திருக்கும் கிடங்கில் தீப்பிடித்து, அதில் இருந்த வெடிகளும் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.

இச்சம்பவத்தில் ஆறுமுகம், வெள்ளையம்மாள் இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி இறந்தனர். மேலும் அங்கு இருந்த பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர் குணசேகரனின் மனைவி மல்லிகா (45), இவர்களது மகள் விஜயலட்சுமி (30), அவருடைய மகன் கிஷோர் (3), மற்றும் செல்வி (43), ஜெயலட்சுமி (30) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

படுகாயம் அடைந்த அனைவரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வெடி விபத்து குறித்து கே.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News