செய்திகள்

தரங்கம்பாடி அருகே சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 10 ஆண்டு ஜெயில்: நாகை கோர்ட்டு தீர்ப்பு

Published On 2016-10-08 09:45 IST   |   Update On 2016-10-08 09:45:00 IST
தரங்கம்பாடி அருகே சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நாகை கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள ஆனைக்கோவில் வடக்குதெருவை சேர்ந்தவர் நாகரத்தினம்(வயது29). தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்தநிலையில் கடந்த 2012-ம் ஆண்டு மே மாதம் நாகரத்தினம் அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தார். அப்போது அவர் வீட்டில் தனியாக இருந்த உறவினரின் 15 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் பொறையாறு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகரத்தினத்தை கைது செய்தனர். இந்த நிலையில் பாலியல்பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி குழந்தையை பெற்றெடுத்தாள். இது குறித்த வழக்கு நாகை மகளிர் விரைவு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி செல்வசுந்தரி, அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக நாகரத்தினத்துக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும், அந்த பணத்தை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்க வேண்டும் என தீர்ப்பு கூறினார்.

அபராதத்தை செலுத்த தவறினால் நாகரத்தினம் மேலும் ஒரு ஆண்டு சிறைதண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி கூறினார். மேலும் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த குற்றத்துக்காக நாகரத்தினத்துக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.1000 அபராதமும் அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கும், அந்த சிறுமிக்கு பிறந்த குழந்தைக்கும் ரூ.2 லட்சம் வழங்க தமிழக அரசுக்கு நீதிபதி பரிந்துரை செய்தார்.

Similar News