செய்திகள்

காவிரி நதிநீர் பிரச்சினையில் மத்திய அரசு துரோகம் இழைத்தது கண்டிக்கத்தக்கது: தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. பேட்டி

Published On 2016-10-07 13:19 IST   |   Update On 2016-10-07 13:19:00 IST
காவிரி நதிநீர் உரிமை போராட்டத்தில் மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம் இழைத்துவிட்டது என்று தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

மயிலாடுதுறை:

மயிலாடுதுறை வந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொது செயலாளரும், நாகை தொகுதி எம்.எல்.ஏ.வுமான தமிமுன்அன்சாரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி நதிநீர் உரிமை போராட்டத்தில் மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம் இழைத்துவிட்டது. அவர்களின் இரட்டைவேடம் அம்பலமாகி உள்ளது. இதில் அரசியல் லாபக்கணக்கோடு மோடியின் மத்திய அரசு செயல்பட்டுள்ளது.

பாரதீய ஜனதா கட்சிக்கு தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும்தான் பலம் உள்ளது. ஆனால், கர்நாடக மாநிலத்தில் பாரதீய ஜனதா கட்சி பலமாக உள்ளது. எனவே, கட்சிக்கு வாய்ப்புகள் அற்ற தமிழகத்தைவிட, அரசியல் வாய்ப்புகள் நிறைந்துள்ள கர்நாடகாவுக்கு ஆதரவாக செயல்பட பாரதீய ஜனதா கட்சியினர் முடிவெடுத்துவிட்டனர். இதனால் தேசிய ஒருமைப்பாட்டை கேள்விக்கு உள்ளாக்கிவிட்டார்கள்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடர்ச்சியாக முன்னெடுத்த சட்ட போராட்டத்தால் கிடைத்த வெற்றியின் பலனை தமிழக மக்கள் அடைய முடியாத வகையில் மத்திய அரசு துரோகம் செய்து இருப்பது கண்டிக்கத்தக்கது. காவிரி நதிநீர் விவகாரத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி சமரசம் இன்றி போராட்டங்களை முன்னெடுக்கும். விவசாயிகளும், விவசாய அமைப்புகளும் நடத்தும் போராட்டங்களிலும் நாங்கள் பங்கேற்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது, மாவட்ட செயலாளர் மாலிக், மாவட்ட பொருளாளர் ஆக்கூர் ஷாஜகான், மாவட்ட துணை செயலாளர்கள் சாகுல்அமீது, அபுசாலி ஆகியோர் உடன் இருந்தனர்.

Similar News