செய்திகள்

சத்தியமங்கலம் வனத்தில் இரவில் தீ விபத்து

Published On 2016-09-26 11:10 IST   |   Update On 2016-09-26 11:10:00 IST
சத்தியமங்கலம் வனத்தில் இரவில் தீ விபத்தில் காட்டுவிலங்குகளின் குட்டிகள், ஊர்வன, பறப்பன ஆகிய உயிரினங்களும் கருகி இறந்திருக்கலாம் என வனத்துறையினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.

சத்தியமங்கலம்:

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூர் காப்புக்காடு கம்பத்ராயன் கிரி வனத்தில் நேற்று இரவு திடீரென தீப்பிடித்து.

அப்போது வேகமாக வீசிய காற்றில் தீ மளமளவென எரிந்து மேலும் பரவியது. இதில் 300 ஹெக்டேர் பரப்பளவில் இருந்த மூலிகை செடிகள் மற்றும் பல ஆண்டுகளாக உள்ள மரங்கள் தீயில் எரிந்து நாசமடைந்தன. கொளுந்து விட்டு எரிந்த தீ 7 கி மீ தூரத்தில் உள்ள சத்தியமங்கலம் வரை தெரிந்தது.

இந்த தீ விபத்தால் வனத்தில் இருந்த பறவைகள், விலங்குகள் பவளக் குட்டை வனத்திற்கு இடம் பெயர்ந்தன. தீ விபத்தில் காட்டுவிலங்குகளின் குட்டிகள், ஊர்வன, பறப்பன ஆகிய உயிரினங்களும் கருகி இறந்திருக்கலாம் என வனத்துறையினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இரவுநேரம் என்பதால் தீயை கட்டுப்படுத்த முடியமால் வனத்துறையினர் திணறினர். நடப்பாண்டு பருவ மழை பொய்த்து விட்டதால் சத்தியமங்கலம் வனப் பகுதியில் வறட்சி ஏற்பட்டது. போதிய மழை இல்லாத காரணத்தால் வனத்தில் உள்ள செடி,கொடிகள் காய்ந்து சருகாகின. பசுமையான மூங்கில் மரங்களும் காய்ந்து விட்டன.

இதனால் வனத்தில் பிடித்த தீ எளிதாக பிற இடங்களுக்கும் பரவியதால் இந்த அளவில் பெரிய விபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று (திங்கட்கிழமை) அதிகாலையில் சத்தியமங்கலம் மற்றும் கடம்பூர் வன ஊழியர்கள் தீ பிடித்து எரியும் வனப்பகுதிக்கு விரைந்தனர். தீயை முழுமையாக கட்டுப்படுத்த போராடி வருகிறார்கள்.

Similar News