செய்திகள்

கோவையில் இந்து முன்னணி பிரமுகர் கொலை: முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இந்து முன்னணியினர் 30 பேர் கைது

Published On 2016-09-24 16:18 IST   |   Update On 2016-09-24 16:18:00 IST
அசம்பாவித சம்பவம் ஏதும் நடக்காமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு மாவட்டத்தில் 30பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஈரோடு:

கோவை அருகே உள்ள துடியலூர் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 36), கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளரான இவரை 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி கொலை செய்தது.

இதற்கு கண்டனம் தெரிவித்து கோவையில் கடைஅடைப்பு, இறுதி ஊர்வலத்தில் வன்முறை, மற்றும் தீ வைப்பு சம்பவங்கள் நடந்தன.

திருப்பூர் மாவட்டத்தில் கடைஅடைப்பு போராட்டம் நடந்தது. மற்றும் 15 பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

இதுபோல ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், கவுந்தப்பாடி, புளியம்பட்டியிலும் நேற்று கடைகள் அடைக்கப்பட்டன. 3 பஸ்கள் மீது கல்வீசப்பட்டது. புளியம்பட்டியில் நேற்று பஸ்கள் மற்றும் எந்த வாகனங்களும் ஓடவில்லை.

ஈரோட்டில் நேற்று இந்து முன்னணி சார்பில் 4 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில் இந்து முன்னணி மற்றும் பாரதிய ஜனதா நிர்வாகிகள் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவங்களையொட்டி ஈரோடு மாவட்டத்தில் அசம்பாவித சம்பவம் ஏதும் நடக்காமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ரோந்து பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 30பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கைது நடவடிக்கை மேலும் தொடரும் என்று போலீசார் கூறி உள்ளனர்.

Similar News